2021ஆம் ஆண்டு, 61 இலங்கையர்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று, சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்ப முயன்ற மனித கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால்(என்.ஐ.ஏ)ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த நிலையில் 39 வயதான மொஹமட் இம்ரான்கான் என்ற குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றம் சாட்டப்பட்டவர் 39 வயதான மொஹமட் இம்ரான் கான் அல்லது ஹாஜா நஜர்பீடன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜூன் 2021 முதல் தல மறைவாகியிருந்தாரெனவும் என்.ஐ.ஏ கூறியது.
பெங்களூரில் உள்ள என்.ஐ.ஏ.யின் ஒரு கண்காணிப்பு குழு கடந்த பல மாதங்களாக இவரது நடமாட்டத்தை கண்காணித்தது, தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு அறியப்படாத இடத்தில் இருந்து அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளது.
இந்த சந்தேகநபர், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான ஈசான் என்ற இலங்கையருடன் இணைந்து மனித கடத்தலில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சர்வதேச மனிதக் கடத்தல் சம்பந்தப்பட்ட ஒரு பரந்த சதித்திட்டத்தில் இம்ரான் கான் ஒரு முக்கிய நபர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
இலங்கைப் பிரஜைகளை அவர்களின் சொந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கும் பின்னர் மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கு முக்கியப் பொறுப்பாக இவர் செயல்பட்டார் என்றும் என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.a