இஸ்ரேலில் இடம்பெற்ற மோதல்களின்போது உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலத்தை அடையாளம்காண டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
அதற்காக அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் அவரது சகோதரியின் டிஎன்ஏ மாதிரிகள் பரிசோதிக்கப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, குறித்த நபர்களின் டிஎன்ஏ மாதிரிகளை இஸ்ரேலுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த அனுலா ரத்நாயக்க உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கடந்த 17ஆம் திகதி உறுதிப்படுத்தியிருந்தனர்.
கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலின் பின்னர் காணாமல்போன அனுலா ரத்நாயக்க, குறித்த தாக்குதலின்போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உரிய பணிகள் நிறைவடைந்தவுடன் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் அனுப்பி வைக்கப்படும் என தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.