ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் 16 ம் ஆண்டு நினைவேந்தல்!

Share

தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (20) வவுனிக்குளம் பகுதியில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

20.04.2008 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் 6 ம் கட்டை பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சேவியர் கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) அவர்களின் 16 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (20) வவுனிக்குளம் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட தாழ்வுப் பாட்டு பங்குத்தந்தை அருட்பணி பெப்பி சோசை அடிகளார் அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் விசேட வழிபாடுகள் நடைபெற்றது.

இதேவேளை யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட பிரான்சிஸ் ஜோசப் அடிகளாருக்காகவும் அவருடன் காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்காகவும் உயிரிழந்த உறவுகளுக்காகவும் மன்றாடப்பட்டது அதனை தொடர்ந்து கிளிபாதர் அவர்களின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மல்லாவி பங்குத்தந்தை நியூமன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக ஆன்மீக இயக்குனர் மைக் டொனால்ட், கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சேவியர் கருணாரட்ணம் அடிகளார் (கிளி பாதர்) வடகிழக்கு மனித உரிமைகள் பணிப்பாளராகவும் யுத்த காலங்களில் மக்களுக்கு மனிதாபிமான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்த நிலையில் 20-04-2008 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்று மல்லாவி வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் ஆராதனையில் கலந்து விட்டு தனது வாகனத்தில் திரும்பிக்கொண்டு இருந்த பொழுது கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு