ஜனாதிபதித் தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளர் பற்றிய பார்வையும் ஜி.ஸ்ரீநேசன்

Share

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற கருத்தினை தமிழர் தரப்பில் சில கட்சிகள் கூறி வருகின்றன.இது பற்றிச் சில கேள்விகள் உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.ஶ்ரீநேசன் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தமிழர் ஒருவர் போட்டியிடுவது தொடர்பாக வினவப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

ஏற்கனவே,2005 ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்குத் தமிழர்கள் அத்தேர்தலைப் புறக்கணிக்குமாறு விடுதலைப்புலிகளால் கோரப்பட்டிருந்தது.

கணிசமான தமிழர்கள் அதன்படி செயற்பட்டதால் பேரின அடிப்படைவாதியான மகிந்த ராஜபக்ச அவர்கள் குறுகிய வாக்கு வித்தியாசத்தால் வென்றார். அதன் விளைவு விடுதலைப் போராட்டம் அழிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு மௌனிக்கப்பட்டது. இது ஒரு பட்டறிவுப்பகிர்வாகும்.

எதிர்வரும் தேர்தலில் கூட தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்தால், தமிழ் வாக்குகள் இல்லாமல், வெற்றி பெற விரும்பும் பேரினவாதியான சிங்கள வேட்பாளர் ஒருவருக்கே இது சாதகமாக அமையும்.

எனவே,இப்படியான ஒரு பேரினவாத வேட்பாளர் ஒருவர் இதற்காக சில சுத்துமாத்துத் தமிழ் தரப்பினருக்கு அன்பளிப்புகள் செய்யவும் தயாராக இருப்பர்.

2022 இல் நாடாளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பத்தில் 4 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் த.தே.கூ இன் முடிவுக்கு மாறாக ரணிலை ஆதரித்ததாகப் பேசப்பட்டது. .ஜனாதிபதி ரணில் தன்னை த.தே.கூ இல் சிலர் ஆதரித்ததாக அடிக்கடி கூறியுள்ளார்.

தற்போது பொது வேட்பாளர் என்ற விடயத்திலும் மக்களிடம் சந்தேகங்கள் உள்ளன.
தமிழர் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் சிங்களவாக்குகளால் வெல்வதற்கு முனைகின்ற பேரினவாதிகளுடன் பேரம்பேசி சுயதேவைகளைப் பெறுவதற்கு சிலர் முனைகின்றார்களா? அல்லது பொது வேட்பாளரை நிறுத்தாமல் உதவி செய்வதாக இருந்தால், தமக்கு வேண்டியதைச் செய்ய வேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கின்றார்களா? என்ற கேள்விகளும் உள்ளன.

அதேவேளை உண்மையில் இதயசுத்தியுடன் சரியான தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துமிடத்து, அவர் நிச்சயமாக வெல்லமாட்டார் என்பது தமிழருக்குப் புரியும். ஆனால்,அந்த வேட்பாளர் ஈழத்தமிழர்களின் அடிப்படையான அபிலாசைகள் எவை என்பதைத் தெளிவாகக் கூற வேண்டும்.

தமிழ்த் தேசியம்,சுயநிருணயம், தமிழர்களின் மரபுவழித் தாயகம்,கூட்டுச் சமஷ்டி, வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு, சர்வதேச விசாரணை, நீதிவழங்குதல், நிவாரணம் அளித்தல், இழப்பீடுகள் அளித்தல், மலையக மக்களின் சமத்துவ வாழ்க்கைக்கான நியந்தனைகள் போன்ற விடயங்கள் தமிழ் பொது வேட்பாளரின் வாக்குறுதிகளாக அமைய வேண்டும்.

மேலும்,அப்பொது வேட்பாளர் கடந்த காலங்களில் எந்தச் சந்தர்ப்பத்திலும் பேரினவாதிகளிடம் சோரம் போகாத தமிழ்த் தேசியவாதியாக அமைய வேண்டும். அவர் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் ஏனைய பிரதேச தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவும் சர்வதேச தமிழுறவுகளின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருத்தல் வேண்டும்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களினதும் ஏனைய பிரதேச தமிழ் மக்களினதும், முடிந்தளவு தமிழ் பேசும் ஏனைய இன மக்களினதும் தார்மீக ஆதரவைப் பெறத் தக்கவராக இருத்தல் வேண்டும்.

அதேவேளை, இந்த பொது வேட்பாளர் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மக்களின் 50 வீதத்தையும் தாண்டி மக்களின் கணிசமான ஆதரவைப் பெற்று சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.

மேலும், குறித்த அந்த தமிழ் வேட்பாளர் வடக்கு கிழக்கில் 50 வீதத்திலும் குறைவான வாக்குகளைப் பெற்றால், தமிழரின் பொதுசனவாக்கெடுப்பு தோல்வி அடைந்ததாக பேரினவாதம் சர்வதேச சமூகத்திடம் கூற வாய்ப்புள்ளது. இது கிணறு வெட்டப் போய் பூதத்தை வரவழைத்ததாக அமைந்துவிடும்.

இப்படியான நிலையில் பேரினவாதம் வடக்கு கிழக்கு பொதுசன அபிப்பிராயத்தினைத் தோற்கடிக்க சலுகைகளை அள்ளி இறைக்க முற்படும். ஒட்டுக்குழுக்கள் அச்சலுகைகளை கைப்பற்றி பணத்தையும் பானத்தையும் இறைக்க முற்படும்.

தமிழ்த் தேசியத்தில் உள்ள சில இரட்டை முக வேடதாரிகள் பாம்புக்கு வாலையும் மீனுக்குத் தலையையும் காட்டி சலுகைக்கும், உரிமைக்கும் இடையிலான விசப்பரீட்சையில் இறங்க வாய்ப்புள்ளது.

எனவே, தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது ஆழமான உரிமை சார்ந்தது. மேலோட்டமான சலுகைவாதிகளை நம்பி இதில் இறக்கினால் ஆபத்தாக அமையும்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்பதாக இந்த விடயம் அமையக் கூடாது. பணத்திற்கு சோரம் போகும் இரட்டை வேடதாரிகள் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவார்கள் எனவும் தெரிவித்தார்.

https://youtu.be/hDXm5MMhNuA?si=WDrZSYLlpenFWy4B

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு