இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகள் (1823-2023) ஆவதை நினைவுகூரும் வகையிலும், அவர்கள் இலங்கைக்கு ஆற்றிய சேவைகளையும், இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய பங்களிப்பைப் பாராட்டியும் இலங்கை மத்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்பாடு செய்யப்பட்ட ‘நாம் 200’ என்ற தலைப்பிலான தேசிய நிகழ்வில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
அவர் பேசியதாவது; மனிதன் வாழ்ந்திராத மலைக் காடுகளை மலையகத் தோட்டங்களாக மாற்றியவர்கள் மலையகத் தமிழர்கள். 1823ம் ஆண்டு கம்பளைக்கு அருகே உள்ள சிங்கபிட்டிய என்ற கிராமத்தில் கேப்டன் ஹென்றி பேட் என்ற பிரிட்டிஷ்காரர், 14 இந்திய தொழிலாளர்களையும் சில சிங்களத் தொழிலாளர்களையும் வைத்து காப்பித் தோட்டம் தொடங்கினார்.
இது இலங்கைப் பொருளாதாரத்தில் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது. காப்பித் தோட்டங்கள் பெருகப் பெருக இந்திய தொழிலாளர்கள் ஏராளமாக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கோப்பி தோட்டத்தை அடுத்து தேயிலை தோட்டங்கள் அதிகமானது. அதனையும் மலையகத் தமிழர்கள் வளப்படுத்தினார்கள்.
கடந்த 200 ஆண்டுகளாக இலங்கையின் நல்வாழ்வுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். திமுக தோன்றிய காலம் முதல் புலம்பெயர் தமிழர்களது உரிமையைக் காப்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டுள்ளது. 1952ம் ஆண்டு திமுகவின் முதல் மாநில மாநாட்டில் பேரறிஞர் அண்ணா “இலங்கை வாழ் திராவிட மக்களுக்காக ஓட்டு உரிமையைக் கொடுத்து நீதியை நிலை நிறுத்துங்கள். ஜனநாயகத்தைக் கேலி செய்யாதீர். வீண் போக்கு வெற்றியைத் தராது” என்று பேசினார். திமுகவின் இரண்டாவது மாநில மாநாட்டில் தனி தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.
1957 தேர்தல் அறிக்கையில், தமிழர்கள் நிறைந்துள்ள வெளிநாடுகளில், தமிழர்களே தூதுவர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று திமுக கோரியது. இப்படி தமிழ் மக்களது உரிமைகளுக்காக ஆரம்ப காலம் முதல் குரல் கொடுக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். “கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்? அது கடல் கடந்த தமிழர்களின் கண்ணீரால்” என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா.
மலையகத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பிய போது அவர்களை அரவணைத்து தமிழக மலைப்பகுதிகளில் குடியமர்த்தி டேன் டீ அரசு ரப்பர் தோட்டங்கள் மூலம் அவர்கள் வாழ்வில் உயர வழிவகை செய்தோம். உரிமை காக்கவும் உதவிகள் செய்து வருகிறோம். மலையக தமிழர்களின் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் போல கல்வியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் அவர்கள் மேலெழும்பும் காலத்தை எதிர்நோக்கி தமிழ்நாடு காத்திருக்கிறது.
கல்வி, சுகாதாரம், வாழிட உரிமைகள், பொருளாதார உதவிகள், சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும். நாட்டை வாழ வைத்த மக்களை வாழ வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.