ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆலோசனைகளை நடத்தியுள்ளது.
இது தொடர்பில் கட்சிக்குள் பலகட்ட பேச்சுக்கள் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருவதாக அறிய முடிகிறது.
நாட்டின் அபிப்பிராயத்தை துல்லியமாக பரிசோதிக்க பொதுத் தேர்தலை பயன்படுத்த முடியும் எனவும் அதன் பெறுபேற்றின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் முடிவெடுக்க வேண்டும் எனவும் பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல்களில் எதிர்வரும் வரவு – செலவுத்திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், வரவு – செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கான எந்த தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை.
அமைச்சரவை மறுசீரமைப்பின் பின்னர் பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சில முறுகல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் வரவு – செலவுத் திட்டத்தில் சில அமைச்சுகள் மீதான ஒதுக்கீடுகளை தோற்கடிக்கும் நோக்கில் பொதுஜன பெரமுனவுக்குள் குழுவொன்று செயல்பட்டு வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தமையும் குறிப்பித்தக்கது.