2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் வடக்கின் தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.
ஜனாதிபதி தேர்தலுக்கான முரசொலி வெளியாது
அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலும் மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் அறிவித்திருந்தார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்க தென்னிலங்கை கட்சிகள் தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றன.
வேட்பாளராக களமிறங்க பலர் தீவிர போட்டி
ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்பாளராக களமிறங்குவார் என அக்கட்சி உறுதியாக அறிவித்துள்ளது.
பொதுஜன பெரமுனவில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் உள்ளன. ஒருசிலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கட்சியின் வேட்பாளராக தெரிவுசெய்ய வேண்டுமென கூறுவதுடன், ஒருசிலர் பசில் அல்லது நாமல் ராஜபக்சவை வேட்பாளராக களமிறக்க வேண்டுமென கூறுகின்றனர்.
மறுபுறம் தம்மிக்க பெபேரராவும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக களமிறங்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். பசில் இவரது நெருங்கிய நண்பராக உள்ளதால் தம்மிக்க பெரேரா இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கூறிவருகின்றனர்.
என்றாலும், மாற்று அணியொன்றின் ஊடாக வேட்பாளராக களமிறங்கும் எண்ணத்தில் சரத் பொன்சேகா இருக்கிறார். அதற்கான சில நகர்வுகளிலும் கடந்தகாலத்தில் அவர் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் சிலர் ஐக்கிய மக்கள் சக்திக்குள் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் என அக்கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவினரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ் வேட்பாளரை களமிறக்க தமிழ் கட்சிகள் தீவிரம்
இந்நிலையில், தென்னிலங்கை கட்சிகளும் அதன் தலைவர்களும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் பகிரங்க அறிக்கைகளை வெளியிடுவதற்கு அஞ்சுவதால் பொது தமிழ் வேட்பாளர் ஒருவரின் ஊடாக தமது நிலைப்பாடுகளை சர்வதேசத்துக்கு தெளிவுப்படுத்த முடியுமென்ற நோக்கத்தின் பிரகாரமே வடக்கின் தமிழ் கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.
என்றாலும், இந்தப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளவில்லை.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ,பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன்,
”அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுவதாக ஏற்கனவே கூறியுள்ளனர். இவர்கள் யாரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க சமரசம் செய்து கொள்ள தயாராக இல்லை.
தமிழ் மக்களது பிரச்சினைகளில் தென்னிலங்கை தலைவர்களுக்கு அக்கறையில்லை
இதைப் பற்றி பொதுவெளியில் பேசக்கூட தயாராக இல்லை. குறைந்தபட்சம் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் இன்னும் முழுமையாக அமுல்படுத்தக்கூட அழுத்தங்களை கொடுக்கவில்லை.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதாகக் கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதற்காக பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்திய போதிலும், பௌத்த பிக்குகளின் ஆட்சேபனையால் அதனை கைவிட்டுள்ளார்.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர், 2009 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்களின் ஆதரவு தெற்கில் இருந்து போட்டியிட்ட சிங்கள வேட்பாளர்களுக்கே வழங்கப்பட்டது.
தமிழ் கட்சிகள் சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச போன்றவர்களை ஆதரித்தன. இதில் மைத்திரிபால சிறிசேன மட்டுமே வெற்றி பெற்றார்.
ஆனால், அவர் ஆட்சிக்கு வந்ததும் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தென்னிலங்கை சிங்களத் தலைவர்கள் எம்மை தொடர்ந்தும் ஏமாற்றியே வந்துள்ளனர்.
தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது குறித்து இலங்கை தமிழரசுக் கட்சி, சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்து எதிர்காலத்தில் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடனும் பேசவுள்ளோம்.
பொது தமிழ் வேட்பாளரை முன்நிறுத்துவதன் மூலம் அவரை ஜனாதிபதி நாற்காலியில் அமர வைக்க முடியாமல் போகலாம். ஆனால், தென்னிலங்கைத் தலைவர்களால் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பதை நாம் காட்ட வேண்டும்.
தற்போதைய நிலவரப்படி, ஜனாதிபதி வேட்பாளர்கள் அதிகமாக களமிறங்கினால், எந்தவொரு வேட்பாளரும் ஐம்பத்தொரு சதவீத வாக்குகளைப் பெற முடியாது.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் முக்கியமானதாகும். பொது தமிழ் வேட்பாளரை முன்நிறுத்துவதில் நாம் உறுதியாக உள்ளோம்.” என்றார்.