மட்டு கோட்டை பிரதான வீதியில் முறிந்து விழும் அபாயத்தில் மரம்; மரத்தை வெட்டுவதற்கு பள்ளிவாசல் நிருவாகம் எதிர்ப்பு

Share

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்கு முன்னால் முறிந்து விழும் அபாயத்தில் உள்ள பாரிய மரத்தை வெட்டுவதற்கு பள்ளிவாசல் நிருவாகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அங்கு பெரும் பரபரப்பு நேற்று ஏற்பட்டிருந்தது.

குறித்த பள்ளிவாசலுக்கு முன்னால் வீதி சுற்றுவட்டத்திற்கு அருகில் பாரிய மரம் ஒன்று பழுதடைந்து முறிந்து விழும் அபாயநிலையில் காணப்படுகின்றது.

இந்நிலையில், பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள மட்/ வின்சன் பெண்கள் தேசிய பாடசாலையில் சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கல்விகற்று வருவதாகவும், அரசகாரியாலயங்கள் நீதிமன்றம் போன்ற காரியாலயங்களுக்கு அந்த மரத்தின் கீழ் உள்ள வீதியால் நாளாந்தம் சுமார் 5 ஆயிரம் பேர் பிரயாணம் செய்வதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் குறித்த மரம் விழும் அபாயத்தையடுத்து வீதியால் பிரயாணிக்கும் மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அச்சத்தின் மத்தியில் பல்வேறு அசௌகரியங்களுடன் பிரயாணித்து வருவதாகவும், இதனால் குறித்த மரத்தை அகற்றுமாறும் பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதற்கமைய குறித்த மரம் வீதி அதிகார சபையின் எல்லைக்குள் இருக்கின்ற நிலையில் இதனை அகற்றுவதற்கு சுற்றுச்சூழல் அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலாளர், மரநகரசபை ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மரத்தை பார்வையிட்டு, மரம் முறிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் பாரிய அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இதனை முற்றாக அகற்றுமாறு தீர்மானிக்கப்பட்டதை தொடர்ந்து பிரதேச செயலாளர் மரத்தை அகற்றுவதற்கு மரக்கூட்டுத்தாபனத்திக்கு அனுமதியும் வளங்கியுள்ளார்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்று (14.10.2023) பகல் 11 மணிக்கு மரத்தை வெட்டி அகற்றுவதற்காக உதவி பிரதேச செயலாளர் தலைமையில் வீதி அதிகாரசபை பணிப்பாளர் மற்றும் மரம் வெட்டும் பணியாளர்கள் அங்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் பள்ளிவாசல் நிர்வாகம் அதனை வெட்டவிடாது தடுத்து நிறுத்தியதையடுத்து அங்கு பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஒன்று திரண்டதுடன், முஸ்லிம் மக்களும் ஒன்று திரண்டதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இதன் பின்னர் பாதுகாப்பு கடமைகளுக்காக பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், மரத்தை முற்றாக அகற்றுமாறு பிரதேச செயலாளரால் உத்தரவிடப்பட்டது.இருந்தும் முஸ்லீம் மக்களின் எதிர்ப்பால் மரம் வெட்டுவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்று மாலை 3 மணிக்கு இடம்பெற்றிருந்தது.இருந்தும் அங்கு இது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்பதனால் இது தொடர்பான இறுதி தீர்மானம் அபிவிருத்தி குழு கூட்டத்திலோ அல்லது நீதிமன்றத்தினூடாகவோ எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,அபிவிருத்தி குழு கூட்டம் நடைபெறும் திகதி இன்னும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு