மட்டு – புதுக்குடியிருப்பு படுகொலையின் 33வது ஆண்டு நினைவு நாள்!

Share

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பில் அப்பாவி தமிழ்மக்கள் 17 பேர் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 33வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

கடந்த 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இரவு இராணுவ சீருடை அணிந்த முஸ்லிம் ஊர்காவற்படையினர் புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் புகுந்து தங்களது வீட்டில் உறங்கிக்யெகாண்டிருந்த தமிழ் மக்களை எழுப்பி தாங்கள் இராணுவத்தினர் என்றும் ஊரை சுற்றி வளைத்துள்ளதாகவும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கூறி பெண்கள், ஆண்கள், முதியவர்கள் உட்பட 45 பேரை கடற்கரை ஓரத்திற்கு அழைத்துச் சென்று கத்தியால் வெட்டி படுகொலை செய்துகொண்டிருக்கும் வேளை இளைஞர் ஒருவர் அவர்களின் பிடியில் இருந்து தப்பியோட அவசர அவசரமாக துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு ஊர்காவற்படையினர் தப்பியோடிவிட்டனர். இதன்போது இவர்களினால் 17 பேர் படுகொலைசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த படுகொலையில் இருந்து உயிர் தப்பிய ஒரு இளைஞனின் திக் திக் நிமிடங்கள்.

கண்களும் கையும் கட்டப்பட்ட நிலையில் கடற்கரைக்கு அண்மையில் இருந்த குளிக்குள் படுகொலை செய்யப்படுவதற்காக காத்திருந்தோம். நான் அன்று தப்பியோட முயற்சிக்காவிட்டால் எமது ஊரையே அழித்திருப்பார்கள் முஸ்லிம் ஊர்காவல் படையினர் – குறித்த படுகொலையில் இருந்து உயிர் தப்பியவரின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்.

செப்டம்பர் 21ம் திகதி புதுக்குடியிருப்பு இனப்படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தினமாகும் அன்று 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதியாகும் எனக்கு அப்போது 25 வயது மட்டக்களப்பு ஆரையம்பதில் உள்ள புதுக்குடியிருப்பு கிராமம்தான் எனது வசிப்பிடம் நான் திருமணம் செய்யவில்லை அம்மா அப்பா மற்றும் சகோதர சகோதரிகளுடன் வசித்து வந்தேன் க.பொ.த உயர்தரம் வரையும் படித்து விட்டு அரச வேலைக்காக காத்துக்கொண்டிருந்த காலம் அது.

வழமைபோல் நான் எனது வீட்டில் (மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிக்கு அருகில்) இரவு உணவை முடித்துவிட்டு எனது அம்மாவினுடைய அக்காவின் (பெரியம்மா) வீட்டுக்கு (கடற்கரைக்கு அண்மித்த இடம்) இரவு உறக்கத்திற்காகச் சென்றேன் அப்போது நேரம் ஒரு 8.00 மணியிருக்கும் பின்பு பிபிசி தமிழோசை கேட்டுவிட்டு 9.20 மணியளவில் உறங்குவதற்காகச் சென்றபோது எங்களது கதவை யாரோ தட்டி தமிழில் அழைப்பதைக் கேட்டபோது கதவைத் திறந்து பார்த்தேன்.

முத்துலிங்கம் என்பவர் எனது பெரியப்பாவின் பெயரைச் (கதிரண்ணன்) சொல்லி அழைத்தார் இராணுவத்தினர் சுற்றிவழைத்துள்ளதாகவும் விசாரணை செய்யப் போவதாகவும் பயப்படாமல் எல்லோரும் வரும்படியும் அவர் சொன்னார்.

அவருக்கருகில் இராணுவ உடை தரித்து ஆயுதங்களுடன் 4 பேர் நின்றார்கள் (இராணுவ உடை அணிந்த முஸ்லிம் ஊர்காவல் படைவீரர்கள்;) (முத்துலிங்கம் என்பவருக்கு மூன்று மொழியும் தெரியும் இதனால் இவரைக் கொண்டே மற்றவர்களை வீடு வீடாகச் சென்று அழைத்தனர்) அப்போது என்னையும் எனது பெரியம்மா பெரியப்பா மற்றும் எனது சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு வீதிக்கு வந்தார்கள்.

அப்போது 40 இற்கு மேற்பட்டோர் வீதியில் வரிசையாக நிற்பதைக் கண்டேன் எங்களையும் அவர்களுடன் நிற்கச் சொன்னார்கள்.அனைவரையும் கடற்கரை நோக்கி அழைத்துச் சென்றார்கள் எனக்கு என்னவோ சந்தேகமாகத்தான் இருந்தது ஏதோ விபரிதம் நடக்கப்போகின்றது என நான் மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.

கடற்கரைக்கு அண்மையில் இருந்த ஒரு பெரிய குளிக்குள் எல்லோரையும் அமர வைத்துவிட்டு எனது பெரியப்பாவையும் மூன்று மொழிகளும் தெரிந்த முத்துலிங்கம் என்பவரையும் முதலில் அழைத்துக்கொண்டு கடற்கரைக்கு சென்றார்கள் அப்போது நின்ற ஒரு ஆயுததாரி (இராணுவ உடை அணிந்த முஸ்லிம் ஊர்காவல் படைவீரர்) ஏதோ சிங்களத்தில் சொல்ல அதற்கு முத்துலிங்கம் என்பவர் “இப்போது இருவர் இருவராக விசாரணைக்கென்று பெரியவர் அழைக்கின்றார் நாங்கள் முதலில் போகின்றோம் அவர் விசாரிக்கின்றபோது சில நேரம் தடியால் அடிப்பார் இதனால் யாரும் அழுதால் நீங்கள் பயப்படத் தேவையில்லை” என சொல்லிவிட்டு போனார்கள்.

அவர்கள் திரும்பிவரவில்லை ஆனால் அழுகுரல் கேட்டது பின்பு இன்னும் இருவர் சென்றார்கள் அவர்களும் வரவில்லை அழுகுரல்தான் கேட்கின்றது அப்போது எனக்கு சந்தேகம் உறுதியாகிவிட்டது.

நான் பின்னுக்கு பின்னுக்கு சென்றேன் 10 பேருக்கு மேல் சென்றுவிட்டார்கள் அடுத்ததாக மிகவும் உறுதியான பலமுள்ளவர்கள் இருவர் (நல்லையா கோவிந்தன்) ஆகியோர் சென்றார்கள் அதில் கோவிந்தன் என்பவர் தப்பி ஓடுவதற்கு எத்தனிக்க அவரை துரத்திக்கொண்டு நீண்ட நேரமாக கொல்லுவதற்காக முயற்சிப்பதும் நல்லையா என்பவர் அவர்களுடன் சண்டைபோட்டு தப்பிக்க எத்தனிக்கவும் அதிக நேரமாக அடுத்த இருவரை அழைப்பதற்கு அவர்கள் வரவில்லை. அப்போது நான் எப்படியாவது ஓட வேண்டும் என முடிவெடுத்தேன்.

ஆனால் பின்பு வந்தவர்கள் பெண்களின் சாறிகளை கிழித்தும் எங்களது சட்டைகளை களட்டியும் எமது கண்ணையும் இரு கைகளையும் பின்புறமாகக் கட்டிவிட்டு இன்னும் இருவரை அழைத்துச் சென்றார்கள் அடுத்ததாக எனது முறை நானும் எனது மைத்துணர் முறையான ஒருவரும் செல்ல வேண்டும் அப்போது நான் அவரின் முதுகில் உரைந்து எனது கண்ணை களட்டினேன் பின்பு கையையும் ஒருமாதிரி களட்டிவிட்டு எனக்கு முன்னால் நின்ற ஆயுததாரியை (இராணுவ உடை அணிந்த முஸ்லிம் ஊர்காவல் படைவீரர்) வேகமாக உதைத்து தள்ளிவிட்டு ஓடினேன் சிறிது நேரத்தில் அடம்பன் கொடியில் தடுக்கி விழுந்தேன் என்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள் நான் விழுந்ததால் எனக்கு படவில்லை என்னுடன் நின்ற எனது மைத்துணரும் மற்ற திசையில் ஓடினார்.

பின்பு நான் ஒரு மணிநேரமாக திசை தெரியாமல் ஒடித்திரிந்து ஊhருக்குள் வந்து எனது வீட்டை அடைந்தேன். நான் ஓடியதால் பயமடைந்த அந்த ஊர்காவல் படையினர் பலரை அவசர அவசரமாக துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் விட்டு ஓடிவிட்டார்கள் இவர்களின் இந்த வெறிச் செயலினால் 17 பேர் படுகொலை செய்யப்பட்டும் 10 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்ந நிலையிலும் மறுநாள் இருந்ததைக் கண்டோம்.

நான் தப்பிக்காமல் இருந்திருந்தால் அழைத்துச் செல்லப்பட்ட 45 பேரும் முதற்கட்டமாக படுகொலை செய்யப்பட்டு அடுத்த கட்டமாக இன்னும் ஊருக்குள் வந்து அடுத்தடுத்த கட்டங்களாக படுகொலை செய்திருப்பார்கள் அந்த முஸ்லிம் ஊர்காவல் படையினர்.

அன்று நடந்தேறிய அந்த கொடுரமான படுகொலைச் சம்பவத்தினை நினைத்தால் இப்போதும் எனது நெஞ்சு காய்கின்றதென கூறினார் குறித்த படுகொலையில் இருந்து உயிர் தப்பிய பேரின்பராசா என்பவர்.

இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் எதிரொலியாகத்தான் இந்த புதுக்குடியிருப்பு படுகொலை அப்போது நோக்கப்பட்டது.

ஏனெனில் இதில் படுகொலை செய்யப்பட்ட 12 வயதுடைய ஒரு சிறுவனை இந்த இராணுவ உடை அணிந்த முஸ்லிம் ஊர்காவல் படைவீரர்கள் சிறிய சிறிய துண்டாக அரிந்து படுகொலை செய்திருந்தார்கள்.

இந்தச் சிறுவன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து வீரச்சாவடைந்த தனது அண்ணனின் எட்டாவது நாளுக்கு தனது வீட்டில் பொங்கல் படைத்துவிட்டு அந்தப் பொங்கலை அவரின் உறவினருக்கு கொடுப்பதற்காக வீதியில் வந்தபோது இந்தக் கொலைகாரர்களின் பிடியில் சிக்கி இருந்தார் அப்போது அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில்தான் இவ்வாறு ஈவு இரக்கமின்றி துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பபட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஏரம்பமூர்த்தி கங்காதரன்
சிரேஸ்ர ஊடகவியலாளர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு