மக்களாணை இல்லாத இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் மக்களுக்கு எதிராக சட்டங்களை உருவாக்க முயற்சிக்கும். சட்டமூலங்கள் கொண்டு வந்து நிறைவேற்றினாலும் அந்த சட்டங்களை மீறி மக்கள் செயற்படுவதற்கு துணிய வேண்டும் என்று அழைப்பு விடுப்பதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. இதனை பகிரங்கமாக குறிப்பிடுகிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சட்டத்தரணிகள் கூட்டிணைவின் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை இலங்கை மன்றக் கல்லூரியில் ‘வாயை மூடும் சட்டங்கள் வேண்டாம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
மக்களின் ஜனநாயக அம்சங்கள், அடிப்படை உரிமைகள் ஆகியனவற்றை முடக்கும் வகையில் சட்டமூலங்கள் உருவாக்கப்படுவது தற்போது ஒரு கலாசாரமாக மாறிவிட்டது. கடந்த ஆண்டு இடம்பெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் மக்களின் கோஷங்கள் மற்றும் எதிர்ப்புகள் மேலோங்கின.
மக்களின் அழுத்தமான கோஷங்களினால் பாரிய ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. மக்களின் கடுமையாக கருத்து வெளிப்பாட்டினால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார். பிரதமர் உட்பட அமைச்சரவை கூட்டாக பதவி விலகியது. ஆனால் மக்கள் போராட்டத்தினால் ஏற்பட்ட மாற்றம் முழுமைப்பெறவில்லை.
முழுமைப்பெறாத மாற்றத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைப்பற்றி தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ளார். மக்கள் போராட்டத்தை தொடர்ந்து மக்களாணை இல்லாமல் போய்விட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆட்சியாளர்களும் அறிவார்கள். மக்களாணை இல்லாத ஆட்சியாளர்கள் தான் தற்போதும் ஆட்சி செய்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை போலியான ஆணையை கொண்டு ஆட்சி நிர்வாகம் முன்னெடுக்கப்படுகிறது.போலி பெரும்பான்மையை கொண்டு நாட்டு மக்களுக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரான சட்டமூலங்கள் கொண்டு வரப்படுகின்றன இயற்றப்படுகின்றன.
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. இந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் இந்த முயற்சிகளை இனங்காண வேண்டும். நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தின் ஊடாக செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள விடயங்களை சட்டமூலத்தை இயற்றாமலே செய்ய கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
பயங்கரவாத தடுப்பு சட்டமூலம் தற்போதும் அமுலில் உள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபை கொண்டு வருவார்கள். நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது சட்டமூல வரைபு தொடர்பில் பேசுகிறோம் என்று குறிப்பிட்டு அந்த சட்டமூலத்தை தாமதப்படுத்திக் கொண்டு மிக மோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து அமுலில் வைத்திருப்பார்கள்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு நிகழ்நிலையில் இடம்பெறுவதை கண்காணிக்கலாம் கைது செய்யப்படலாம். ஆகவே, அடக்குமுறைக்காக புதிய சட்டங்களை இயற்றாமல் பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு சகல உரிமைகளையும் முடக்க முடியும்.பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு முனைப்பான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
இந்த அரசாங்கம் பதவியில் இருக்கும் வரை இவ்வாறான சட்டங்கள் ஆட்சியாளர்களுக்கு தேவையானதாகவே இருக்கும். ஆகவே ஒரு முழுமையான மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான குரல் எழுப்பட வேண்டும். பொருளாதார பாதிப்பால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள்தற்கு மக்கள் அணி திரண்டு போராட வேண்டும். எமது குரல் கடந்த ஆண்டை காட்டிலும் அழுத்தமாக ஒலிக்க வேண்டும்.
சட்டமூலங்கள் கொண்டு வந்து நிறைவேற்றினாலும் அந்த சட்டங்களை மீறி மக்கள் செயற்படுவதற்கு துணிய வேண்டும் என்று அழைப்பு விடுப்பதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. இதனை பகிரங்கமாக குறிப்பிடுகிறேன் என்றார்.