எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் பஸில் ராஜபக்சவை களமிறக்க பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பஸில் ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையைத் துறந்து உடனடியாக ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இறங்குமாறும் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பஸில் தரப்பு வட்டாரம் தெரிவிக்கின்றது.
அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொதுஜன பெரமுன இதுவரை தமது வேட்பாளர் தொடர்பில் எவ்வித உறுதியான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் ஒருதரப்பு ரணில் விக்கிரமசிங்கவை நிறுத்த வேண்டும் என்றும், இன்னொரு தரப்பு பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நிறுத்த வேண்டும் என்றும் கோரி வருகின்றன.
ஆனால், இவர்களை விட ஜனாதிபதி வேட்பாளருக்குத் தகுதியானவர் பஸில் ராஜபக்ஷதான் என்று மொட்டுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கருதுகின்றார்கள்.இதனால் அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்துவிட்டு உடனடியாகக் களத்தில் குதிக்குமாறு மொட்டுவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பஸிலுக்கு அழுத்தம் கொடுத்து வருவதை அறியமுடிகின்றது.