எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமையை விலக்கிக் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்சவை அறிவிக்க வேண்டும் எனவும் அதற்கு முன்னதாக அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தேர்தலுக்கு தயாராகி வந்த பசில் ராஜபக்சவிடம் இவ்விடயம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, கோட்டாபய ராஜபக்சவை வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஏனைய அரசியல் கட்சிகள் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என சிரேஷ்ட உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
எவ்வாறாயினும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் பலர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தி சார்பில் அனுரகுமார திஸாநாயக்கவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.