வரவு – செலவுத் திட்டம் தொடர்பில்தான் கடந்த சில நாட்களாக நாட்டில் பேசுபொருளாக உள்ளது. அனைத்துக் கட்சிகளினதும் அரசியல் மேடைகளிலும் வரவு – செலவுத் திட்டம் பற்றிதான் பேசப்படுகிறது.
எவரும் எதிர்பாராத விதத்தில் வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள அரசாங்கம் முன்மொழிவுகளை வழங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்துததான் அரசாங்கம் சம்பள அதிகரிப்பு என்ற மாயையை மேற்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.
நாட்டை அதல பாதாளத்துக்குள் தள்ளிவிட்டு தற்போது சம்பள அதிகரிப்பு என்ற போர்வையில் பொருளாதார நெருக்கடிகளை மூடிமறைத்து மக்களின் வாக்குகளை சூறையாடவே இந்த நாடகத்தை அரசாங்கம் அரங்கேற்றியுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மக்களுக்கு சலுகைகள் வழங்கினால் மட்டுமே வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளார்.
அண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, நாமலின் வீட்டில் கூடி, வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோரிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள தீர்மானித்திருந்தனர்.
நாமல் ராஜபக்ஷ கடந்த புதன்கிழமை தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
”வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாவிட்டால் இதற்கு ஆதரவளிப்பது பற்றி சிந்திக்க வேண்டும்” என நாமல் ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
”எம்.பி.கள் குழுவாக சுயேச்சையான முடிவுகளை எடுப்பது நல்லதுதான். ஆனால் இதை நீங்கள் அதிகம் ஆராய வேண்டும். இது தொடர்பில் நீங்கள் அனைவரிடமும் கேட்க வேண்டும், குறிப்பாக கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் நிதியமைச்சர்களை சந்தித்து பேச வேண்டும்.” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாமலிடம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாமல் ராஜபக்ஷ கட்சித் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்கள், நிதிச் செயலாளர்கள் மற்றும் பலரையும் சந்திக்கத் தொடங்கவுள்ளார்.
மேலும், பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோரையும் இந்த வாரம் அவர் சந்திக்க உள்ளார்.