யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம் என தெரிவித்தே தேசிய வளங்களை ஒரு குடும்பமே அபகரித்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை அதிகரித்து இந்நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான மின் பாவனையாளர்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
இந்நிலையில் பெறுமதி சேர் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஓர் பிற்போக்குத்தனமான வரி விதிப்பாகும்.
கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் நபர்களிடமிருந்து முறையாக வரி அறவிடப்பட வேண்டும். வரி செலுத்தாதோரிடமிருந்தும் முறையாக வரி அறவிடப்பட வேண்டும். ஊழல் முறைகளில் அரச சார்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் தேவையற்ற வரிச் சலுகைகளும் நீக்கப்பட வேண்டும். இம் முறைகள் மூலம் வெட் வரியை அதிகரிக்காமல் அரசின் வருவாயை அதிகரிக்க முடியும்.
யுத்த வெற்றி என்ற பெயரிலும், தேசப்பற்று என்ற போர்வையிலும் மக்களின் தேசிய வளங்களை ஒரு குடும்பம் எவ்வாறு அபகரித்தது என்பது தெரிய வேண்டும்.
யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் முழுமையான சுதந்திரம் வழங்கப்படவில்லை , நாட்டின் வளங்களை இவர்கள் எவ்வாறு திருடினார்கள் என்பதை பண்டோரா பத்திரங்கள் வெளிப்படுத்தின.
நாட்டை அழித்த ராஜபக்சவுக்கு நான் துணைபோகமாட்டேன் என்பதால் அவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டம் அமுல்படுத்தப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை நாட்டுக்கு திருப்பிப் பெறுவோம்” என தெரிவித்தார்.