ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏழாவது ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெறவுள்ளது.
சமய அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை அளித்து, கட்சியின் ஆண்டு விழா பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், சுயபரிகார தர்மம் தொடர்பான பிரசங்கம் இன்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, மகா சங்கரத்தினம் எனும் தலைப்பில் நாளை (04) அன்னதானம் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிகழ்விற்கு பெருமளவான அமைச்சர்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த ஏழு வருடங்களில் உள்ளூராட்சித் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் போன்றவற்றில் இந்தக் கட்சி வெற்றியீட்டியுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தாமரை மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு 85 வீத வெற்றியை இக்கட்சி பெற்றுக்கொண்டது.