மயிலத்தமடு ,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பினை நிறுத்தி அப்பகுதியை கால்நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல்தரையினை பாதுகாக்கவேண்டும் .இல்லாதுவிட்டால் வடகிழக்கில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை ஒன்றுதிரட்டி பாரிய போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய காணி அபகரிப்பினை கண்டித்தும் கால்நடை பண்ணையாளர்களுக்கு நீதிகோரியும் 02.11.2023 வியாழக்கிழமை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் பாரிய போராட்டமும் கவன ஈர்ப்பு பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.
வந்தாறுமுலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் அங்கு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
தமக்கான நீதி வழங்கக்கோரி கடந்த 49 நாட்களாக மட்டக்களப்பு கால்நடைப்பண்ணையாளர்களால் தொடர்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து சித்தாண்டியை நோக்கி சென்ற கவன ஈர்ப்பு பேரணியானது சென்ற வந்தாறுமூலையில் உள்ள பொதுச்சந்தைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனை தொடர்ந்து மீண்டும் ஊர்வலமானது சித்தாண்டியை நோக்கி சென்றது.சித்தாண்டியில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு பேரணி சென்றதும் அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காவியுடை கொண்டு எங்களை நசுக்கவேண்டாம்,எங்கள் நிலம் எங்களுக்கு சொந்தம்,வாயில்லா ஜீவனை வதைக்கவேண்டாம்.தொல்பொருள் என்ற போர்வையில் கோயில்களை இடிக்காதே,அடக்குமுறைகளை திணிக்காதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
இதன்போது அடாவடியில் ஈடுபடும் அம்பிட்டிய தேரரை கைதுசெய்யுங்கள், நீதிமன்ற கட்டளையினை நடைமுறைப்படுத்துங்கள், மயிலத்தமடு எங்கள் நிலம்,வடகிழக்கு தமிழர்களின் தாயகம்,எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.