யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகை ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படைத்தை வெளியிட்டமை தொடர்பில் பத்திரிகையின் ஆசிரியரிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று (01) விசாரணைகளை முன்னெடுத்து, வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அதன்படி, கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் , குறித்த பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் விசாரணைக்காக பத்திரிகையின் செய்தி ஆசிரியரை சுமார் மூன்றாண்டுகளின் பின்னர் குற்றப் புலனாய்வு பிரிவினர் , கொழும்பில் உள்ள தமது தலைமை அலுவலகத்திற்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், கொழும்பு தலைமை அலுவலகத்தில் செய்தி ஆசிரியரிடம் காலை 09 மணிக்கு விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வு பிரிவினர் மதியம் 1.30 மணி வரையிலான சுமார் 4.30 மணி நேரம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.
இதேவேளை, விடுதலை புலிகளின் தலைவரின் புகைப்படத்தை பிரசுரத்தமைக்காக 2020ஆம் நவம்பர் மாத இறுதியில் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி , குறித்த பத்திரிகை ஆசிரியர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் பத்திரிகை ஆசிரியர் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் வழக்கில் இருந்து நீக்கப்பட்டு, அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும் குறித்த வழக்கு நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.