ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இதுவரை நிறைவேற்றவில்லை. தேர்தல்கள் தொடர்பில் அவர் அண்மையில் வழங்கிய வாக்குறுதியையாவது நிறைவேற்ற வேண்டும்.”
இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வாக்குறுதிகள் வழங்கிக் காலத்தை இழுத்தடிக்கலாம் என்று ஜனாதிபதி தப்புக்கணக்குப் போடுகின்றார். அது ஒருபோதும் கைகூடாது.
2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதித் தேர்தலும் அதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறும் என்று அண்மையில் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். அத்துடன் 2025ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தல்கள் தொடர்பில் அவர் வழங்கிய இந்த வாக்குறுதியையாவது நிறைவேற்ற வேண்டும்.
தற்போதைய அரசு மக்கள் ஆணையை இழந்த அரசு. அந்த அரசு தெரிவு செய்த ஜனாதிபதியும் மக்கள் ஆணையை இழந்தவராகவே கருதப்படுவார். எனவே, ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் காலம் தாழ்த்தாது விரைந்து நடத்தப்பட வேண்டும். என்னைச் சந்திக்கின்ற சர்வதேச பிரதிநிதிகளிடமும் இதனை நான் எடுத்துரைத்து வருகின்றேன்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் காட்டித் தேர்தல்களைப் பிற்போட முடியாது.” – என்றார்.