வவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பாக 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா நகர சபை உள்ளக மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றிருந்ததுடன், அதில் இருந்த ஒரு பகுதியினர் அதில் இருந்து வெளியேறியிருந்தனர்.
இந்நிலையில் வெளியேறிய அணியினரை வைத்து வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்டத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவு ஒன்றை மேற்கொள்வதற்காக கூட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தனர்.
இந்நிலையில் கூட்டத்திற்கு வருகை தந்த வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க உறுப்பினர்களுக்கும், வவுனியாவில் அண்மையில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
பாதிக்கப்பட்ட தாய்மார் தமக்குள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பை ஏற்படுத்தி தம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முறையிட்டனர்.
கூட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வவுனியா நகர சபை செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கூட்டத்தை நடத்த விடாது இரு பகுதி தாய்மாரையும் அங்கிருந்து வெளியிற்றியிருந்தனர்.
வெளியேறிய இரு பகுதியினரும் வவுனியா பொலிஸ் நிலையம் சென்று தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்தனர். குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது, இரு பகுதியினரும் இணக்கப்பாட்டுக்கு வராது ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி, செயலாளர் ஆனந்தன் நடராஜா லீலாதேவி, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சபிதா ராஸ்திரி, வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான சண்முகராசா சறோஜினிதேவி, சிவாநந்தன் ஜெனிற்றா, செல்லத்துரை கமலா, பேரின்பராசா பாலேஸ்வரி ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.