தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பதவி விலக வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பையே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
யாழில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சம்பந்தன் ஐயாவின் அரசியல் அனுபவம் தொடர்பில் அனைவருக்குமே தெரியும். அவர் ஒரு தெளிவான அரசியல்வாதி என்பதுடன் நீண்ட அனுபவசாலி என்றே பலரும் கூறுவார்கள்.
அவரது தெளிவான பார்வையும் அரசியல் அனுபவமும் எப்போதும் தேவையானது. ஆனால், வயது மூப்பின் காரணமாக அவரால் முன்னரைப் போன்று செயற்பட முடியவில்லை.
குறிப்பாக அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு சம்பவங்கள் நடைபெறுகின்றபோது அந்த மக்கள் தங்கள் பிரதிநிதி தொடர்பில் தேடுகின்றதுடன் தங்களுக்காக ஒருவர் களத்தில் இருக்கவேண்டும் என்று கோரியிருக்கின்ற நிலைமை உள்ளது.
இவ்வாறான நிலைமையில்தான் எம்.ஏ சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியொன்றை வழங்கியிருந்தார்.
சம்பந்தன் ஐயா அனுபவசாலி என்றாலும் அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்களது எதிர்பார்ப்பை சுமந்திரன் பதிலாகக் கூறியுள்ளார்.
எம்.ஏ சுமந்திரன் கூறியது உண்மையானதுதான். ஆனால், சுமந்திரன் நினைத்திருந்தால் பொய் கூறியிருக்கலாம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் இதனைக் கூறினார்.
அதேநேரத்தில் சுமந்திரன் எம்.பி. இந்த உண்மையைச் சொல்லாமல் விட்டிருந்தால் மீளவும் சுமந்திரன் எம்.பியைப் போட்டுத் தாக்கியிருப்பீர்கள்.
ஆகவே, சுமந்திரனின் உண்மையான இந்தக் கருத்து தொடர்பில் கட்சியின் அடுத்து வரும் கூட்டங்களில் கூட ஆராயப்படலாம் எனவும் ரவிகரன் தெரிவித்தார்.