மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு கடந்த சனிக்கிழமை (22) விஜயம் செய்திருந்தனர்.இவர்களுடைய இந்த விஜயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோ தலைமையிலான சுமார் 100க்கு மேற்பட்ட ஆதிவாசிகள் குழுவினர் யாழிற்கு விஜயம் செய்து,யாழின் முக்கிய இடங்களை பார்வையிட்டுள்ளதுடன், குறித்த குழுவினருக்கான வரவேற்பு நிகழ்வு ஒன்றும் பெருமெடுப்பில் இடம்பெற்றது.
அண்மைக்காலமாக தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட நில பறிப்பு,திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள், திட்டமிட்ட கலை-கலாசார-பண்பாட்டு அழிப்புகள் அதிகரித்திருக்கும் நிலையில் ஆதிவாசிகளின் யாழ்.விஜயம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
தமிழரின் தாயக பூமி வடக்கு-கிழக்கு என்பதற்கு புதிய வியாக்கியானம் கூறிவரும் ஆட்சியாளர்களும் தொல்பொருள் திணைக்களத்தினரும் பௌத்த பிக்குகளும் ,ஆதிவாசிகளை யாழுக்கு அனுப்பி அதனூடாக புதிய ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு தயாராவதாக சந்தேகிக்க வாய்ப்பிருக்கிறது.
இன்று தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கில் ஆதிவாசிகள் இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாத ஒரு நிலையில்,மஹியங்கனையில் வாழும் மூத்த குடிகளென கருதப்படும் ஆதிவாசிகளை கொண்டு புதியதொரு ஆபத்தை தமிழர் தாயகத்தில் ஏற்படுத்துவதற்கு சிங்கள இனவாத தரப்புகள் முயல்கிறார்களோ என்ற சந்தேகமும் தமிழ் மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பில் அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் தமிழ் செயற்பாட்டாளர்களும் கவனம் எடுப்பது காலத்தின் தேவையாகும் என்பதை கூறிவைக்கின்றோம்.தமிழர் தேசத்தின் வரலாற்றை மாற்றத்துடிக்கும் தரப்புகளுக்கு தமிழருடைய மௌனம் உந்துசக்தியாக அமைந்துவிடக்கூடாது.
https://youtu.be/yyo4UC6BGH4?si=wi8zoDhO2ih5Rdnn