அரசாங்கத்தை தொடர்ந்து கொண்டுசெல்ல ஜனாதிபதிக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்காவிட்டால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அமைச்சுப் பதவிகளை வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட தலைவர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.
மக்கள் கடும் நெருக்கடியில் இருக்கும் வேளையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் மக்களின் பணத்தை வீணடிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பொதுஜன பெரமுனவின் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட தலைவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டுமென கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ மற்றும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். என்றாலும், ஜனாதிபதி அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார்.
இம்முறையும் ஜனாதிபதி தமது கோரிக்கைகளை நிராகரித்துள்ளதால் பொதுஜன பெரமுனவின் தலைமை ஜனாதிபதி மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.