நவராத்திரி விழாவுக்கு பாடசாலை மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட ரூ. 64 ஆயிரம் ரூபாவை அப்படியே கொள்ளையடித்த பாடசாலையின் அதிபர் ஒருவர், பூசாரியிடம் முட்டையொன்றை மந்திரித்து பாடசாலை மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவரிடமும் சத்தியம் வாங்கிய சம்பவமொன்று அம்பலமாகியுள்ளது.
மத்திய மாகாணம் ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட பொகவந்தலாவ பிரதேச தோட்டப் பகுதியில் இயங்கும் பாடசாலையில் இவ்வாறான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நவராத்திரி விழாவினை முன்னிட்டு ஒரு மாணவரிடம் 150ரூபாய் அடிப்படையில் 64000ம் ரூபாய் பணம் குறித்த பாடசாலையின் அதிபரினால் வசூல்செய்யப்பட்டது.
குறித்த தொகையினை கொண்ட இந்த பணம் வசுல் செய்யப்பட்டு இரண்டு தினங்களில் பாடசாலையின் அதிபரினால் கொள்ளையடிக்கப்பட்டதாக மாணவர்களும் ஆசிரியர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டைமையினால் குறித்த பாடசாலையில் 24.10.2023.செவ்வாய்கிழமை இடம் பெறும் விஜயதசமி பூஜை மந்தகதியில் இடம் பெற்றதாகவும் விஜயதசமி பூஜையினை நடத்துமாறு மாணவர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்த போது பாடசாலையின் அதிபர் பூசாரி ஒருவரிடம் சென்று முட்டை ஒன்றை மந்திரித்து மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் சத்தியம் பெற்றுள்ளதாக மாணவர்கள் சுட்டி காட்டுகின்றனர்.
2007ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தின் படி, பாடசாலைகளில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளுக்கு எந்த ஒரு மாணவனிடமும் பணம் அறவிட முடியாது என சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் குறித்த அதிபர் இது போன்ற கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளார்.
அதிபரினால் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் இந்த 64000ம் ரூபாய் பணத்திற்கு ஆசிரியர்கள் சிலர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு கோறுகின்ற போதும் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்வதற்கு தயக்கம் காட்டி வருகிறார் அதிபர்.
ஏனைய பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூழிக்க படாமல் நவராத்திரி விழாவினை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், இந்த ஒரு பாடசாலையில் மாத்திரம் மாணவர்களிடம் பணம் வசூல் செய்யப்பட்டும் அதனை கொள்ளையடித்து கொண்டு இன்றைய தினத்தில் விஜயதசமி பூஜை மந்தகதியில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.