மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதியில் பண்ணையாளர்களுக்கும் கால்நடைகளுக்கும் இடம்பெற்றுவரும் அநீதிக்கு எதிராகவும் மேச்சல்தரைகோரிய அறவழிப் போராட்டத்தின் 37வது நாளாகவும் தொடர்ச்சியாக இரவு பகலாக குறித்த அறவழிப் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
குறித்த அறவழிப் போராட்டம் மட்டக்களப்பு சித்தாண்டி பால் சேகரிப்பு நிலையத்துக்கு முன்பாக பிரதான வீதியில் கூடாரம் அமைத்து பண்ணையாளர்கள் அமர்ந்திருந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
தங்களுடைய நிரந்தரமான கோரிக்கைகளை முன்வைத்து பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிரந்தமான தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக தங்களின் போராட்டம் இடம்பெறும் என போராட்டக்காரர்கள் தெரிவிப்பதுடன் பண்ணையாளர்கள் உள்ளிட்ட மனைவிமார் மற்றும் குழந்தைகள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய பண்ணையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார். அவருடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி சர்வதேசத்திற்கு ஒரு முகத்தை காட்டி கொண்டு அதேசமயம் சிங்கள இனவாதிகளுக்கு முழுமையாக துணை போகிறார் என சுட்டிக்காட்டியுள்ளார்.