இஸ்ரேல் – பலஸ்தீன போர் முடிவுக்கு வரவேண்டும்; ஆசியான்- வளைகுடா நாடுகள் கூட்டாக வலியுறுத்து

Share

மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு நீடித்து நிலைக்கக்கூடிய போர் நிறுத்தம் இடம்பெற வேண்டும் என்று ஆசியான் தலைவர்களும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றத் தலைவர்களும் வலியுறுத்தினர்.

குடிமக்களுக்கு எதிரான அனைத்து தாக்குதல்களையும் அவர்கள் கண்டித்தனர்.

பணைய கைதிகளாக பிடிக்கப்பட்டு இருக்கும் குடிமக்கள், குறிப்பாக பெண்கள், சிறார்கள், நோயாளிகள் அனைவரும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று அந்தத் தலைவர்கள் கூட்டறிக்கையில் கோரிக்கை விடுத்தனர்.

சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் ஆசியான்-வளைகுடா ஒத்துழைப்பு மன்ற உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டிலேயே ஆசியான் நாட்டு தலைவர்கள் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நிலவரம் மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்த ஆசியான் தலைவர்கள், மனிதாபிமான உதவிகளும் நிவாரணப் பொருள்களும் அடிப்படை அத்தியாவசியச் சேவைகளும் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாகச் சென்று சேர்வதை அனைத்துத் தரப்புகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

காஸா முழுவதும் மின்சாரம், தண்ணீர் வசதிகள் மீள கிடைக்க வேண்டும். எரிபொருள், உணவு, மருந்துப் பொருள்கள் உடனடியாகச் சென்று சேர வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

குடிமக்களைக் குறிவைத்து தாக்குவதை அனைத்துத் தரப்புகளும் நிறுத்த வேண்டும்.

அனைத்துலக மனிதாபிமான சட்டத்தை குறிப்பாக ஜெனிவா உடன்பாட்டின் கோட்பாடுகளையும் அம்சங்களையும் அனைத்துத் தரப்பினரும் பின்பற்றி நடக்க வேண்டும்.

இஸ்ரேல்-ஹமாஸ் பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காணும்படி அதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளையும் அந்தத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இரண்டு நாட்டுத் தீர்வே உகந்ததாக இருக்கும்.சவூதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றியம், அரபு லீக் ஆகிய அமைப்புகள் எடுக்கும் முயற்சிகளைத் தாங்கள் ஆதரிப்பதாகவும் அந்தத் தலைவர்கள் கூறினர்.

மாநாட்டில் உரை நிகழ்த்திய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரும் இருதரப்பிலும் அப்பாவி மக்கள் மடிவதும் மிகவும் கவலை தருகிறது என்று கூறினார்.

“ஹமாஸ் அக்டோபர் 7ஆம் திகதி நடத்திய தாக்குதலைச் சிங்கப்பூர் கண்டிக்கிறது. தன்னைத் தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு.

என்றாலும் இஸ்ரேல் அனைத்துலகச் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். இதுவே சிங்கப்பூரின் நிலைப்பாடு,” என்று லீ உறுதிபட கூறினார்.

காஸாவில் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிகள் சென்று சேர வேண்டும் என்று அனைத்துத் தரப்புகளையும் வலியுறுத்துவதாக லீ கூறினார்.

மத்திய கிழக்கில் நிலையான, நிரந்தர, நியாயமான தீர்வைச் சாதிக்க இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் சாதிக்க வேண்டும். இதைத்தான் சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரித்து வருகிறது.” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

https://youtu.be/hZ6U-mBlZzg?si=Zuor8H0l53kZ2iSn

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு