முல்லைத்தீவு நீதிபதி டி.சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினை உட்பட பல விடயங்களை கண்டித்து தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக இடம் பெறும் அநீதிகளை கண்டித்து வடகிழக்கில் வெள்ளிக்கிழமை (20) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருகோணமலை நகர் பகுதியில் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படுவதுடன் மாணவர்களை பெற்றார்கள் வந்து அழைத்து செல்கின்றனர். இருந்த போதிலும் ஒரு சில கடைகள் பூட்டப்பட்டிருந்தாலும் வழமை போன்று கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளும் இயங்கி வருவதுடன் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது.
பொது போக்குவரத்து வழமை போன்று இடம் பெற்றாலும் குறைவானவர்களே பயணத்தில் ஈடுபடுவதையும் அவதானிக்க முடிகிறது. முல்லைத்தீவு நீதிபதி டி.சரவணராஜாவுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினை உட்பட பல விடயங்களை கண்டித்து தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த ஹர்த்தாலை ஏற்பாடு செய்து மக்களுக்கு துண்டுப் பிரசுரம் ஊடாகவும் விழிப்புணர்வு நடாத்தியிருந்தனர். இதனை அடுத்து வட கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு பொது மக்களுக்கு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.