அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம தலைமையில் இன்று நடைபெறவிருந்த விசேட முகாமைத்துவக் குழு கூட்டம் குழப்பநிலை காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.
குறித்த கூட்டம் இன்று கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணியளவில் ஆரம்பமாக இருந்த நிலையில் கல்முனை உப பிரதேச செயலகத்திற்கு முதலில் சென்ற அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம அங்கு ஒன்று கூடிய பொதுமக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸார் வருகை தந்து பொதுமக்களிற்கு அறிவுறுத்தல்களை வழங்கிய போதிலும் அங்கு ஒன்று கூடிய மக்கள் உப பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்கள் தொடர்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் பிரஸ்தாபித்தனர்.
இதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் விசேட முகாமைத்துவக் குழு கூட்டம் ஒன்றினை மேற்கொண்டு இதற்கான தீர்வொன்றினை பெற முயற்சிப்பதாக பொதுமக்களிடம் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அம்பாறை மாவட்ட செயலாளர் கல்முனை உப பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் உடன் காணப்பட்டார்.
பின்னர் அவ்விடத்தில் இருந்து அருகில் உள்ள கல்முனை பிரதேச செயலகத்திற்கு சென்ற அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கல்முனை பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி தலைமையிலான அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடி அவ்விடத்தில் இருந்து சென்றிருந்தார்.
இதே வேளை கல்முனை பிரதேச செயலகம் கல்முனை உப பிரதேச செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எழுந்துள்ள முரண்பாடுகளினால் இரு தரப்பினரும் வழக்குத் தாக்கல் மேற்கொண்டுள்ளதுடன் வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.