மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பகுதியில் உள்ள தமிழ் மக்களின் மாட்டு பட்டிகளுக்குள் நுழைந்த சிங்களவர்கள் பட்டிகளையும், பட்டிக்குள் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தி தீக்கிரையாக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எமது கணவன்மாரை மயிலத்தமடு – மாதவனைக்கு அனுப்பிவிட்டு இருக்கும் எங்களை கொலை செய்வதற்கான சாத்தியம் நிச்சயமாக இருக்கிறது. இரவில் நடந்த சதித் திட்டத்தை பார்க்கும்போது.எமது சொத்துக்களை தீ வைத்து இப்படியான பிரச்சினைகளை ஏன் உருவாக்குகிறீர்கள்? நாம் போராட வரவில்லை,இனக் கலவரத்தை ஏற்படுத்தவும் வரவில்லை, மயிலத்தமடு மேய்ச்சல் தரையை தருமாறு கேட்கவே போரா டுகிறோம். இதற்கான தீர்வு கிடைக்காவிட்டால் எமக்கான தீர்வு வரும் வரை நாம் போராடிக் கொண்டே இருப்போம் என தெரிவித்து கதறியழுதுள்ளனர்.
மேலும் இந்தப் பகுதிக்கு அருகில் உழவு வேலை செய்து கொண்டிருந்த சிங்களவர்கள் மது போதையில் தமது பட்டிகளுக்குள்ளும், குடில்களுக்குள்ளும் நுழைந்ததாகவும், தமது உடமைகளை களவாடியும் தீ வைத்து எரித்தும் சென்றதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.
தம்மை தாக்க வந்த அந்தக் கும்பலிடம் இருந்து தாம் தப்பித்து சென்றதாகவும், தப்பி ஓடாமல் விட்டால் தமது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.இவ்வாறு பல அச்சுறுத்தலின் மத்தியில் கால்நடைகளை மேய்க்கும் தமக்கு நியாயம் கிடைக்காதா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.