பரம எதிரிகள் மோதும் போட்டி இன்று; வரலாற்றை திருப்பி எழுதுமா பாகிஸ்தான்?

Share

ஐ.சி.சி. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு அணியும் நேற்றுடன் தலா 2 ஆட்டத்தில் விளையாடிவிட்டன.

இன்று முதல் 3-ஆவது போட்டியில் ஆடுகின்றன.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. உலக கோப்பை என்பதால் மிக கூடுதலான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்த தொடரில் இரு அணிகளுமே தங்களது முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது இந்தியாவா? பாகிஸ்தானா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.

உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை. 7 தடவையும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடும்.

கடந்த மாதம் மோதிய ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. கடைசியாக ஆடிய 5 ஆட்டத்தில் (2018 முதல் கடந்த மாதம் வரை) இந்தியா 4இல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி முடிவு இல்லை.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியான சாதனை சதம் மூலம் கேப்டன் ரோகித் சர்மா நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். இதே போல விராட் கோலி தொடர்ச்சியாக 2ஆவது அரைசதத்தை அடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

மேலும் கே.எல். ராகுலும் நல்ல நிலையில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இஷான் கிஷனும், ஸ்ரேயாஸ் அய்யரும் ஆப்கானிஸ்தானுடன் நேர்த்தியாக ஆடினார்கள்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன்கில் முதல் 2 ஆட்டத்தில் விளையாடவில்லை. அகமதாபாத்தில் அவர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார்.

ஆனாலும் அவர் இடம் பெறுவாரா? என்பது உறுதியில்லை. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது.

ஜஸ்பிரீத் பும்ரா மிகவும் அபாரமாக பந்து வீசி வருகிறார். அவர் 6 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரும் பந்து வீச்சில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக பந்து வீசிய இந்திய வீரர்கள் ஆப்கானிஸ்தானிடம் ரன்களை வாரி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் கவனமுடன் பந்து வீசுவது அவசியமாகும்.

பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் நெதர்லாந்தை 81 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. இலங்கைக்கு எதிராக 345 ஓட்டங்கள் இலக்கை சேஸ் செய்து உலக கோப்பையில் சாதனை படைத்தது.

இதனால் அந்த அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவாலாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி கடைசியாக லண்டன் ஓவல் மைதானத்தில் 2017ஆம் ஆண்டு ஜூனில் நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ஓட்டங்களில் தோற்கடித்து இருந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இந்தியாவை வெல்லும் வேட்கையில் உள்ளது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் முகமது ரிஸ்வான் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். சதம், அரை சதத்துடன் 199 ஓட்டங்களை குவித்துள்ளார்.

அப்துல்லா ஷபீக் தனது முதல் உலக கோப்பை ஆட்டத்திலேயே சதம் அடித்து முத்திரை பதித்தார். இது தவிர சவுத் ஷகீல், இப்திகார் அகமது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள்.

தலைவரும், உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான பாபர் ஆசம் முதல் 2 ஆட்டத்திலும் மோசமாக ஆடினார்.

பந்துவீச்சை பொறுத்தவரை ஹசன் அலி 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஹாரிஸ் ரவூப் 5 விக்கெட் எடுத்துள்ளார். ஷகீன் ஷா அப்ரிடி உள்ளிட்ட சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இந்த போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக அகமதாபாத் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

1.30 இலட்சம் பேர் அமரும் இந்த ஸ்டேடியத்தில் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 7 ஆயிரம் பொலிஸாரும், 4 ஆயிரம் ஊர்காவல்ப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். ஸ்டேடியத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 15ஆம் திகதி தான் இந்த போட்டியை முதலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. நவராத்திரி விழாவையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ஒருநாள் முன்னதாக மாற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு