பொது முடக்கத்திற்கு அழைப்பு விடுத்த அரசியல் வாதிகளுக்கு குடிசை மக்களின் துன்பம் தெரியாது

Share

எதிர்வரும் 20 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெறவுள்ள பொது முடக்கத்தை மீள பெற வேண்டி மறவன்புலவு சச்சிதானந்தம் ஊடகங்களிற்கு அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார்

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குபேரர்களுக்குக் குடிசை மக்களின் துன்பம் தெரியாது.

பொது முடக்கத்துக்கு அழைத்த அரசியல்வாதிகளுள் பலர் குபேரர்கள். வசதிகளின் மடியில் வாழ்பவர்கள். சொகுசுகளின் சொப்பனத்தில் மகிழ்பவர்கள். உதவியாளர்களின் ஒத்துழைப்பில் திளைப்பவர்கள் பலர். மக்களின் வரிப்பணத்தை உறிஞ்சுவோர் சிலர்.

இன்று உழைத்தால் நாளை கஞ்சி. இன்றைய சம்பளம் நாளைய தீபாவளிக்கு. இது தான் ஈழத் தமிழர் தாயகத்தின் உழைக்கும் தொழிலாளர் 3 இலட்சம் தமிழரின் நிலை.

ரூ 10,000 தொடக்கம் 20,000 வரை நாளாந்தம் பணம் புரள உழைப்போர் சிறு வணிகர்கள்.

ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரூபாய்க்காக நாள் முழுதும் வாடிக்கையாளருக்காகக் காத்திருக்கிறார்கள். இத்தகைய சிறு வணிகர்களின் தொகை 3 இலட்சம் ஈழத் தமிழர் தாயகத்தில்.

பொது முடக்கத்தால் மகிழ்ச்சியடையக் கூடியவர்கள் நாளாந்தம் உழைக்காமல் மாதம்தோறும் வங்கியில் சம்பளத்தைக் குறைவின்றிப் பெறுகின்ற அரச ஊழியர்கள், பொது நிறுவன ஊழியர்கள். அவர்களுக்குள்ளும் கடமை உணர்வாளர் முடங்க விரும்ப மாட்டார்கள். ஈழத் தமிழர் தாயகத்தில் அவர்களின் தொகை 3 இலட்சமே.

ஈழத் தமிழர் தாயகத்தில் பெருவணிகர் தொகை 25,000 – 30,000. பொது முடக்கத்தால் இவர்களுக்கு இழப்புக் கணிசமாகும். எனினும் அந்த இழப்பை தாங்கும் வலிமை அவர்களுக்குப் பெருமளவு உண்டு.

சரக்குந்துகள் ஓடாது, பேருந்துகள் ஓடாது . தொடர்வண்டிகள் இடை நிற்கும் விமானங்கள் ஓடாது . கப்பலும் ஓடாது. பயண முன்பதிவுடன் காத்திருக்கும் நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள வாய்ப்புகளை எதிர்நோக்கும் இளைஞர் யாவரையும் பொது முடக்கம் கடுமையான உளைச்சலுக்கு உள்ளாக்கும்.

பொதுமுடக்கத்துக்கு அழைத்த குபேரர்களான அரசியல்வாதிகளே, போராட்டங்களால் தொடர்ச்சியாகப் பொருள் இழந்து, ஊக்கம் இழந்து, மெது மெதுவாக மீண்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தாயகத்தின் ஏழைகளான 8 லட்சம் குடும்பத் தலைவர்கள் மீது, சார்ந்த பொதுமக்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றாதீர்கள்.

மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு அழைத்தீர்கள். மக்கள் வரவில்லை என்ற குறை உங்களுக்கு. உங்கள் போராட்டம் ஈழத் தமிழர் தாயகம் முழுவதுமாக அமையவில்லை.

மருதனாமடத்தில் போராடினால் முசலியில் உணர்வு ஏறுமா? கொக்குவிலில் போராடினால் கல்முனையில் உணர்வு பீறிடுமா? குளப்பிட்டிச் சந்தியில் மண்டியிட்டால் கொக்கட்டிச்சோலையில் உணர்வு குமுறுமா?

25,000 சதுர கிலோமீட்டர் நீண்டு அகன்ற தமிழர் தாயகத்தை 5, 6 சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் முடக்க முயலாதீர்கள். பிரதேச வாதத்தைத் தூண்டாதீர்கள். யாழ்ப்பாணிகள் ஆட்சி எங்களுக்கு வேண்டாம் என ஏனைய பிரதேசத்தவர் கூறும் நிலைக்குத் தள்ளாதீர்கள்

போராட்டத்துக்கு உரிய காரணங்கள் உள்ளன . மனித நாகரீக வரலாறே போராட்டத்தின் பெறுபேறு. போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை.

இன்றைய மறுவாழ்வுச் சூழ்நிலையில், தோல்வியால் முடங்கிய விடுதலை உணர்வுகளையும் தோல்வியால் இழந்த தற்சார்புப் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கும் நிலையில், பொது முடக்கம் போராட்டமாகாது. இயல்பு வாழ்க்கையைக் குழப்புவது போராட்டமாகாது. பொருளாதாரத்தை வீழ்த்துவது போராட்டமாகாது.

பொது முடக்கத்தைக் கோராமல் போராட்ட உத்திகளை மாற்றுங்கள். இயல்பு வாழ்க்கையைக் குழப்பாமல், மீள் வளர்ச்சியை வீழ்த்தாமல் போராட்ட உத்திகளைத் தீர்மானியுங்கள்.

ஈழத் தமிழர் தாயகத்தின் மரபுகளை மீட்டெடுக்கும் போராட்டத்தைக் கடந்த ஆறு ஆண்டுகளாகச் சிவ சேனையினர் நிகழ்த்தி வருகிறோம். ஈழத் தமிழர் தாயகம் எங்கும் போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

ஒவ்வொரு போராட்டத்திலும் சிவ சேனையினர் வெற்றி அடைந்திருக்கிறோம். எந்த ஒரு போராட்டத்திலும் மக்களின் இயல்பு வாழ்க்கை குழம்பவில்லை. எந்த ஒரு போராட்டத்திலும் எவரும் கைதாகவில்லை. அவ்வாறே நாங்கள் போராட்ட உத்திகளை வகுத்தோம், வெற்றியடைந்து வருகிறோம்.

தோல்வியடைந்த சமூகம் நாங்கள். அடிமைகளாக வாழும் சமூகம் நாங்கள். இழப்புகளைக் கடுமையாகச் சந்தித்த சமூகம் நாங்கள். குபேரர்களான அரசியல்வாதிகளே, கஞ்சி குடிக்கும் மக்களைக் கவனத்தில் கொள்ளுங்கள். அரசியல் அடிமைகளாக உள்ள அவர்கள், பொருளாதார அடிமைகளாகத் தொடர முடியாது.

அதனால் பொது முடக்க அறிவிப்பை மீளப் பெறுங்கள். என அவர் வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு