திருகோணமலை- கங்குவேலி குளத்தின் பகுதிகள் சிலரினால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அக்கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கங்குவேலி குளத்தினுள் சிலர் அத்துமீறி விவசாயம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் இதனால் குளத்தின் பகுதிகள் சேதமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு குளத்தின் ஆக்கிரமிப்பை தடைசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
கங்குவேலி கிராமத்தைச் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இக்குளத்தை நம்பி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இக் குளத்திற்குள் சிலர் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன் பாரிய இயந்திரங்களைக் கொண்டு குளத்தின் அணைக்கட்டுகளை சேதமாக்கி வருவதாகவும் கால்வாய்களை வெட்டி சேதப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட செயலகத்தில் (10) இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் பின்னர் ஆளுநரை சந்தித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதனை தடுத்து நிறுத்துமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும், சம்மேளன உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதனடிப்படையில் கிழக்கு ஆளுநரின் பணிப்புரைக்கமைய திருகோணமலை பிராந்திய நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளரையும் சந்தித்து உரையாடியதாகவும் குறித்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்ந்து வருவதாகவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
இக்குளமானது 2019ஆம் ஆண்டு 24 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டதாகவும் மூதூர் பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாரிடம் முறையிட்டபோதும் இது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படவில்லை எனவும் விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர்.
அத்துடன் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு குளத்தின் ஆக்கிரமிப்பை நிரந்தரமாக தடைசெய்து இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் என கங்குவேலி திருக்கரைசயம்பதி விவசாய சம்மேளனத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.