மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் நாளைய தினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் சரியான தீர்மானங்கள் எடுக்கப்படும் என நம்புகின்றோம் அல்லாதுவிட்டால் மாவட்டத்தில் நிர்வாக முடக்கத்தினை செய்யவேண்டிய நிலையேற்படும் என கால்நடை பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் 25நாட்களாகவும் போராடிவரும் நிலையில் இன்றைய தினம் விசேட ஊடகவியலாளர் சந்திப்பினையும் நடாத்தினார்கள்.
இன்றைய தினமும் வீதியில் குடும்பமாக இருந்து தமது கோரிக்கையினை வலியுறுத்தி கால்நடை பண்ணையாளர்கள் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
நாங்கள் நாட்டை கேட்கவில்லை எமது கால்நடைகளை காலம்காலமாக வளர்த்துவரும் எமது நிலத்தினையே கேட்கின்றோம்.அதனை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தனர்.
தாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளிடம் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் ஜனாதிபதியை மட்டுமே நம்புவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
வானத்தாலேயே வந்து வானத்தாலேயே ஜனாதிபதி செல்கின்றார். மக்களை கண்டு ஏன் அச்சம்கொள்ளவேண்டும்.கால்நடை பண்ணையாளர்களும் இந்த நாட்டின் மக்கள்தான் என்பதை அவர் மறந்துவிட்டாரா என்பதே எமது கேள்வியாகும் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாங்கள் போராடிக்கொண்டிருக்கும்போது எங்களது பிரச்சினைகளை கேட்டு தீர்க்கமுடியாதவராக இந்த நாட்டின் ஜனாதிபதி இருப்பது கவலையானது எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
நாங்கள் எங்கள் சூழலுக்கு ஏற்றதாகவம் எமது பிரதேசத்திற்கேற்றதாகவும் கால்நடைகளை வளர்த்து வருகின்றோம் ஆனால் ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவித்த கருத்துகள் எங்களுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது எனவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
https://youtu.be/rVhE-JtOgQk?si=CEIzWm9xxhSZo3c1