2023 – 2025ஆம் காலப்பகுதிக்கான இந்தியப் பெருங்கடல் ‘ரிம்’ அமைப்பின் (Indian Ocean Rim Association – IORA) தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்றுள்ள நிலையில், எதிர்வரும் 11ஆம் திகதி கொழும்பில் அதன் 23 ஆவது அமைச்சரவை மாநாடு நடைபெறவுள்ளது.
அமைப்பின் அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக, மூத்த அதிகாரிகள் குழுவின் 25வது கூட்டம் நடைபெற உள்ளது.
IORA தலைவர் பதவியை இலங்கை ஏற்கும் இரண்டாவது தடவை இதுவாகும். இதற்கு முன்னர் 2003 முதல் 2004 வரை தலைமை பதவியை இலங்கை வகித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் ரிம் அமைப்பு என்பது இந்தியப் பெருங்கடலின் 23 நாடுகளை ஒன்றிணைக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பில் 11 உரையாடல் பங்குதாரர்களும் உள்ளனர்.
இலங்கையின் தலைமைத்துவத்தை ஏற்கும் போது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமைச்சர்கள் குழுவின் தலைவராக செயல்படுவார்.
வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன்னதாக IORA மூத்த அதிகாரிகள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார்.
‘பிராந்திய கட்டடக்கலையை வலுப்படுத்துதல்: இந்தியப் பெருங்கடல் அடையாளத்தை வலுப்படுத்துதல்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்ற உள்ளது.
கடந்த ஆண்டு மாநாடு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்றதுடன், இதில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் பங்கேற்றிருந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்த மாநாட்டில் கலந்துகொள்வது இறுதி தருணத்தில் ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கையில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துவரும் பின்புலத்தில் ‘IORA’ மாநாடு இலங்கையில் நடைபெற உள்ளது. இது சர்வதேச ரீதியில் பெரும் அவதானம் மிக்க மாநாடாக மாறியுள்ளது.
பிராந்தியத்தில் பலம் வாய்ந்த நாடான இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் பங்கேற்பாரா இல்லையா என்பதுதான் தற்போது எழுந்துள்ள சிக்கல்.
அவர் மாநாட்டில் பங்கேற்பதை அவரது அலுவலகம் உறுதி செய்திருந்தாலும், உருவாகி வரும் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு அவரது இலங்கை விஜயம் ஒத்திவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் சீன சார்பு கொள்கை காரணமாக இந்தியா சில அரசியல் நெருக்கடிகளை இலங்கைக்கு கொடுத்துவருகிறது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய இருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் ராஜ் நாத் சிங்கின் இலங்கை பயணம் ஒத்திவைக்கப்பட்ட இந்திய வெளியுறவு செயலகம் அறிவித்தது.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் இலங்கையில் அயோரா மாநாட்டில் பங்கேற்பது நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது