வட, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு

Share

ஏழு தமிழ்க் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்களின் ஆதரவுடன் அடுத்தவாரம் முன்னெடுக்கப்படவுள்ள வட, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு முழுமையான ஆதரவு அளிக்கவுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தல்களை விடுத்து ஏதேச்சதிகாரப் போக்கில் அரசாங்கம் பயணிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மைய காலத்தில் அரசாங்கம் நீதித்துறையின் சுயாதீனத்தினை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது.

விசேடமாக, நிறைவேற்று அதிகாரமும், சட்டவாக்கத்துறையினதும் தலையீடுகள் அதிகரித்து வருகின்றன.

அவ்வாறானதொரு தருணத்தில் தான் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

அவர் தனக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விதமான நிலைமைகள் நாட்டின் நீதித்துறை மீதான சுயாதீனத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன. நாட்டின் நீதித்துறை கேள்விக்குட்படுவதானது பாரதூரமான விடயமாகும்.

அரசாங்கம், நீதித்துறையை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி அதன்மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றமையானது, அதன் ஏதேச்சதிகாரப் போக்கினையை அம்பலப்படுத்தவதாக உள்ளது.

நாடு அவ்விதமான போக்கில் செல்வதற்கு இடமளிக்க முடியாது.

எமது கட்சியின் தீர்மானத்துக்கு மாறாகச் செயற்பட்டவர் மீது கட்சி உரியவாறு நடவடிக்கைகளை முன்னெடுத்து அவரது உறுப்புரிமையிலிருந்து நீக்கியது.

அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குக்கு எதிரான தீர்ப்பு உறுப்புரிமை நீக்கம் சரியாதென அங்கீகரித்துள்ளது.

ஆகவே, குறித்த தீர்ப்பானது, நீதிமன்றத்தின் சுயாதீனத்தினை உறுதிப்படுத்துகின்றது, என்பதோடு பதவிகளுக்காக கட்சித் தீர்மானங்களை மீறிச் செயற்படுகின்றவர்களுக்கு முன்னெச்சரிக்கையாகவும் உள்ளது.

எனினும், நாட்டில் தீர்ப்புக்கள் தாமதமாகுவதற்கு நீதித்துறையின் மீதான அழுத்தங்களும், அச்சுறுத்தல்களும் காரணமாகி வருகின்றன என்பதற்கு பல உதாரணங்கள் காணப்படுகின்றன.

ஆகவே, நீதிபதியின் வெளியேற்றம் உட்பட நீதித்துறை மீதான அச்சுறுத்தல்களை கண்டித்து வடக்கு,கிழக்கு தழுவிய முழு அளவிலான ஹர்த்தாலுக்கு தமிழ்க் கட்சிகள் ஏகோபித்து எடுத்த தீர்மானத்துக்கு வலுச்சேர்ப்பதற்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தயாராகவுள்ளது.” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு