மொட்டுக் கட்சியின் வேட்பாளர் தாமே என்பதை ஜேர்மனியில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் சூட்சுமமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டபோதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 2022 ஆம் ஆண்டு சர்வதேச விசாரணை அவசியம் எனக்கூறிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது சர்வதேச விசாரணை அவசியம் இல்லை என ஜேர்மனியில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
2015-2019 வரையான நல்லாட்சி காலத்தில் வெளிவிவகார அமைச்சராக செயற்பட்ட மங்கள சமரவீர ஊடாக நிறைவேற்றப்பட்ட 30/1 கீழ் தீர்மானம், இறுதி யுத்த விசாரணைக்கு Hybrid நீதிமன்றம் ஊடாக சர்வதேச ஆதரவுடன் விசாரணை தேவை என்று முன்மொழிந்தவரும் ரணில் விக்ரமசிங்கவே.
ஆனால் தற்போது மொட்டுக் கட்சியின் ஜனாதிபதியாக செயற்பட்டுக்கொண்டு விசாரணை வேண்டாம் என்கிறார்.யாரை பாதுகாக்க ரணில் விக்கிரமசிங்க முயல்கிறார்?
மொட்டுக் கட்சியினரே உங்களது ஜனாதிபதி வேட்பாளர் நான் தான்,வேறு யாரையும் தேடாதீர், நீங்கள் சொல்வதை கேட்பேன், உங்களுக்கு ஏற்றால் போல் செயற்படுவேன் என்ற செய்தியையே ஜேர்மனியிலிருந்து ஊடக நேர்காணல் மூலம் ஜனாதிபதி ரணில் மொட்டுக் கட்சியினருக்கு வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி பதவிக்காகவும், அதிகாரத்துக்காகவும் ரணில் விக்ரமசிங்க ஜனநாயகத்தை தாரை வார்த்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டபோதும் ஒரு சர்வாதிகாரியாகவே செயற்பட்டார். தமது பதவிக்காகவும், அதிகார பேராசைக்காகவும் மக்களின் ஜனநாயகத்தோடு விளையாடி வருகிறார்.
அதன் காரணமாகவே பிள்ளையான் இன்றும் இராஜாங்க அமைச்சராக இருக்கிறார்.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் மற்றும் தேர்தலை ஒத்திவைத்தல் நடவடிக்கைகள் ஊடாக மக்களின் கருத்து சுதந்திரத்தை அடக்கவே முயல்கின்றார்.
நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை ஏன் ஊடகத்துறை அமைச்சால் சமர்ப்பிக்க முடியாமல் போனது? ஏன் பாதுகாப்பு அமைச்சால் சமர்ப்பிக்கப்பட்டது?
இதன்மூலமே அரசாங்கத்தின் நோக்கம் நன்கு புலப்படுகிறது.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பில் இதுவரை ஊடகத்துறை அமைச்சு சார் ஆலோசனை குழுவிலும் கூட கலந்துரையாடப்படவில்லை.
எதிர்க்கட்சிகள், ஊடகதுறைசார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களின் கருத்துக்களைக்கூட கேட்காமல், அவசரமாக நிகழ்நிலை காப்பு சட்டமூலம் கொண்டுவருவது மக்களின் கருத்து வெளிப்பாட்டின் ஊடாக சமூகத்தில் எழும் பொது கருத்துருவாக்கத்தை அடக்குவதே இதன் நோக்கம் என்பது நன்கு புலப்படுகிறது” என தெரிவித்தார்.