இலங்கையில் விடுதலைக்கு போராடுபவர்களுக்கு ஒருபோதும் நியாயம் கிடைக்கப் போவதில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவிற்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தலைக் கண்டித்து யாழில் இன்று இடம்பெற்ற மனிதச் சங்கிலி போராட்டத்தின் நிறைவில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காரணத்தையும் வெளிப்படையாக கூறி துணிச்சலாக நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில் நீதித் துறையை சேர்ந்தவர்கள், ஜனநாயக சக்திகள், வழக்கறிஞர்கள், மக்கள் என அனைவரும் ஆதரவு வழங்கி வடக்கு கிழக்கில் மட்டுமல்லாது ஏனைய பிரதேசங்களிலும், பாராளுமன்றத்திலும் போராட்டங்களை மேற்கொள்கின்ற அளவிற்கு இது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.
” அடக்கி ஒழுக்கப்பட்ட தமிழ் மக்களின் புதைகுழிகள் தோண்டப்பட்டு எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு அதற்கான விசாரணைகளை மேற்கொண்டு அது ஒரு இனப் படுகொலை என அதற்கான தீர்ப்புகளை வழங்கி கொண்டு இருந்த நீதிபதிக்கும் நீதித் துறைக்கும் இன்று பாதுகாப்பில்லை. இந்த அரசாங்கம் இதற்கான சரியான நடவடிக்கையை எடுக்கவில்லை என்பதை கண்டித்து நீதி துறையை பாதுகாப்பதற்காக நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும், பாதுகாப்பு தேடி நீதிபதி ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமையை மக்கள் கண்டித்துள்ளார்கள்.
இலங்கையில் நீதி இல்லை என்பதோடு இலங்கையில் விடுதலைக்கு போராடுபவர்களுக்கு நியாயம் கிடைக்கப் போவதில்லை என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.
சர்வதேசமும் ஐ.நாவும் தமிழ் மக்களின் விடுதலையும் நீதியும் நிரூபிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்து தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்தோடு அனைத்து பிரதேசங்களில் இருந்தும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் போராட்டத்தின் இலக்கை அடைவதற்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்தும் போராட்டத்தை மேற்கொள்வதற்கு ஒன்றுபடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.