நீதிபதி விவகாரம்; மருதனார்மடம் தொடக்கம் யாழ்.நகர் வரை இன்று மனித சங்கிலி போராட்டம்

Share

மக்கள் போராட்டமே விடிவுக்கான பாதை…

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி வெளிநாட்டிற்கு சென்றுள்ள முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரத்தில் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையிலும் குறித்த விவகாரம் தொடர்பில் ஒரு நீதியான விசாரணையை கோரியும் சர்வதேச சமூகம் இவ்விடயத்தில் அவதானம் செலுத்துவதை வலியுறுத்தியும் இன்று புதன்கிழமை யாழ்.மருதனார்மடம் தொடக்கம் யாழ்.நகர் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.

இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த போராட்டத்தில் மனித உரிமை அமைப்புகள், மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளிலே அக்கறை கொண்டு ஆர்வத்துடன் செயற்பட்டு வருகிற அமைப்புகள், மத ஸ்தாபனங்கள் உட்பட சமூகத்தின் அனைத்து பிரிவினரதும் ஆதரவை கோரி நிற்பதாக ஏற்பாட்டாளர்களான தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் ஏழு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடமான வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தினால் மீறப்பட்டு வரும் அதேவேளை,தமிழரின் நிலங்கள்,அடையாளங்கள் -பண்பாடுகள் தொடர்ந்தும் சூறையாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில்,தமிழர்களை அடக்கி-ஒடுக்கி தமிழரின் வாழ்விடங்களை அபகரிக்கும் சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு தடையாக இருக்கும் தமிழ் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி-அவர்களை மௌனிகளாக்கும் செயற்பாட்டிலும் சிங்கள இனவாதிகள் இறங்கியிருக்கிறார்கள்.இந்நிலையில் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் அனுமதித்தால் தமிழர்களின் இருப்புக்கும் தமிழர்களின் அபிலாஷைகளுக்கும் ஆபத்தாக முடிந்துவிடும்.ஆகவே,இனியும் தமிழர்கள் மௌனிகளாக -பொறுமையாக இருப்பார்களேயானால் மிகப்பெரும் ஆபத்துகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

எனவே,நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் என்பது தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும்; –

தமிழ் மக்களுடைய தேசத்துக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும்; சிங்கள பேரினவாதிகள் முன்னெடுக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு தமிழர்கள் தடையாக இருக்கக்கூடாது என்ற ஒரு அழுத்தமான செய்தி வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே,தமிழ் மக்கள் சிங்கள பேரினவாதத்தின் ஆபத்து தொடர்பில் சிந்திப்பது அவசியம் என்பதுடன்,மக்கள் தங்களுடைய எதிர்ப்பை காட்ட முன்வரவேண்டும். மக்கள் எழுச்சி மாத்திரமே தமிழருக்கான நீதியை பெற்றுத்தரும்.தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இந்த மனித சங்கிலி போராட்டத்தை ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தங்கள் கைகளில் எடுத்து இலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் ஆணித்தரமான ஒரு செய்தியை வழங்க முன்வரவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு