முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடத்தப்பட்டு, அதன் பின்புலம் கண்டறியப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டே முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவுமே கூறப்படுகின்றது.
நீதிபதி கூறியது உண்மையெனில் நாடு எந்தக் கட்டத்தில் உள்ளது? தமக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்பதற்காக நீதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுமானால் நாட்டில் சட்டத்தின் ஆட்சி எப்படி நடைபெறும்? என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
எனவே, மேற்படி சம்பவம் தொடர்பில் உண்மையை கண்டறியும் வெளிப்படை தன்மையுடனான விசாரணை அவசியம் என்றும்,
உண்மையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதா, ஆம் எனில் அது யாரால் விடுக்கப்பட்டது? இல்லையெனில் அதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி என்ன? என்பது கண்டறியப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.