மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும் இலங்கையில் காணப்படும் இனமோதல்களிற்கும் எந்த தொடர்புமில்லை என மலேசியாவின் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் பொலிஸ் தலைமையதிகாரி டட்டுக் அலாவுதீன் அப்துல் மஜீத் செய்தியாளர்மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் செந்துலில் இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து மேலும் தகவல்களை வெளியிட்டுள்ள பொலிஸார் பிளாஸ்டிக் பையினால் மூச்சு திணறச்செய்யப்பட்டே அவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டமைக்கான காரணங்கள் இன்னமும் உறுதியாக தெரியவரவில்லை என சென்டுலின் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளார்.
சென்டுலில் கடையொன்றில் இடம்பெற்ற படுகொலை சந்தேகநபர்களான இலங்கையர்கள் இன்னமும் கிளாங் பள்ளத்தாக்கு பகுதியிலேயே மறைந்துள்ளனர் என கருதுவதாகவும் பொலிஸ் அதிகாரி டட்டுக் அலாவுதீன் அப்துல் மஜீத தெரிவித்துள்ளார்.
குற்றம் இடம்பெற்ற பகுதிக்கு அருகிலேயே இரு சந்தேகநபர்களும் உள்ளனர் என நம்புவதாக தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி அவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் டட்டுக் அலாவுதீன் அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளேன் கொல்லப்பட்ட ஒருவரின் பெற்றோரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் இனமோதல்களிற்கும் இந்த கொலைகளுக்கும் தொடர்பா என்ற கேள்விக்கு பொலிஸ் அதிகாரிஇல்லை என பதிலளித்துள்ளார்.