ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவயில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் உட்பட ஆசிரியர்கள் 4 பேரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரி இன்று காலை பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், குறித்த ஆர்ப்பாட்டத்தில் 200ற்கும் மேட்பட்ட பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது பாடசாலையின் ஒழுக்கத்தை சீரழித்த அதிபர் ஆசிரியர்களை இடமாற்றம் செய், பாலியல் சேட்டை செய்த ஆசிரியரை வெளியேற்று, ஹட்டன் கல்வி பணிமனையே நடவடிக்கை எடு, இப்போதைய அதிபரை வெளியேற்று தகுதியான அதிபரை நியமனம் செய், தீர்மானம் எடுக்க தெரியாத முதுகெலும்பு அற்ற அதிபர் எமக்கு வேண்டாம் போன்ற சுலோகங்களை ஏந்தி பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்து பாடசாலையின் ஆசிரியர்களிடையே முறையான ஒழுக்கம் காணப்படுவதில்லை எனவும் ஒரு சில ஆசிரியர்களால் மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கையினை முறையாக மேற்கொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ஆசிரியை ஒருவருக்கும் ஆசிரியர் ஒருவருக்கும் தகாத உறவு பாடசாலையில் காணப்படுவதாக பிரதான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்கள் இருவரும் பாடசாலையின் ஒரு அறையில் தகாத உறவு கொண்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் மாணவர்கள் கல்வியில் ஆசிரியர்களின் இவ்வாறான மோசமான செயலால் பின்னடைவை கண்டுள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஹட்டன் வலய கல்வி பணிமனையின் பணிப்பாளர் நிஹால் அபயகோனின் பணிப்புரைக்கமைய சம்பவ இடத்திற்கு கோட்டம் 2ற்கு பொறுப்பான கோட்டக் கல்வி பணிப்பாளர் என்.சிவகுமார் அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு குறித்த நான்கு ஆசிரியர்களும் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் நாளைய தினத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனவும் வித்தியாலயத்தின் தற்போதைய அதிபர் இராதாகிருஷ்ணனை தெரிவித்தார்.
மேலும், குறித்த ஆசிரியர்கள் இருவரும் ஹட்டன் வலய கல்வி பணிமனைக்கு விசாரணைக்கு அழைக்கப்படுவதோடு கெர்க்கஸ்வோல்ட் இலக்கம் 2 தமிழ் வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கும் வரை அப்பாடசாலையின் பிரதி அதிபர் துஸ்யந்தனை பாடசாலையை பொறுப்பேற்று நடத்துமாறும் பணிப்புரை விடுத்தார்.
குறித்த பாடசாலைக்கு புதிய அதிபரை நியமிக்காமல் தற்போது உள்ள அதிபர் மீண்டும் நியமிக்கப்பட்டால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த பாடசாலையில் கடந்த சில காலமாகவே மாணவர்களிடையேயும் பல பாலியல் சார்ந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.