ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள விடயங்கள் தொடர்பாக முறையான தொழில்முறை ரீதியிலான தேசிய விசாரணைகளுக்காக சர்வதேச தொழிற்நுட்ப உதவியை பெற்றுக்கொடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Francheயிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருக்கும் இடையில் நேற்று முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியல் விடயங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட விடயங்கள் சம்பந்தமாக முறையான விசாரணைகளை நடத்த சர்வதேச தலையீட்டை கோரி ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை அலுவலகத்தில் கடிதம் ஒன்றை கையளிக்க உள்ளதாக மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் கூறியிருந்தார்.
எனினும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் அந்த கடிதத்தை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்து பெற்றுக்கொள்வதாக கூறியதாகவும் முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.