மட்டக்களப்பு பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை மீட்டுத்தரக் கோரி சுழற்சி முறையிலான போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக இன்று காலை முதல் குறித்த போராட்டம் முன்னெக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கையில்,
“மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விவசாய கூட்டத்தின் போது மேய்ச்சல் தரை தொடர்பாக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
இதனையடுத்தே தங்களது மேய்ச்சல் தரையை மீட்டுத்தருமாறு கோரி போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
இந்த போராட்டமானது சுழற்சி முறையிலான போராட்டமாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட உள்ளது. இதற்கான தீர்வு கிடைக்காவிடத்து கால்நடைகளைக் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை முற்றுகையிடவுள்ளோம்.
எமது இந்த போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரித்தனர்.
மேலும் சுழற்சி முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் நேரடி வியஜம் ஒன்றினை மேற்கொண்டார். இதன்போது கோவிந்தம் கருணாகரனிடம் போராட்டக்காரர்களால் மகஜரொன்று கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.