ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான எந்தவொரு முறையான வெளிநாட்டு விசாரணைக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலை வெளிப்படுத்திய சேனல் 4 ஆவணப்படம் ராஜபக்ச மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
‘ தேர்தல் நெருங்கும் போது இந்த விடயம் வெளியில் வந்து, மீண்டும் மறைந்து விடுகிறது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் டிவி-ரேடியோ சேனல்களில் இருந்து விசாரணை நடத்த முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோதும் பாராளுமன்றத்தில் தெரிவுக்குழுவொன்றை நியமித்திருந்தார்.
அது தொடர்பான அறிக்கை கூட உள்ளது. சரத் பொன்சேகாவைப் போன்று சுமந்திரனும் அந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றார். அந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் கிடைக்கின்றன.
இந்த அறிக்கைகள் யாரேனும் திருப்தி அடையவில்லை என்றால், அடுத்த கட்டமாக, அரசு சாரா அமைப்புகள் மற்றும் தொலைக்காட்சி ரேடியோ சேனல்களை அழைத்து விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, உலகில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் குறித்து விசாரணை நடத்தும் அரசு நிறுவனங்களைத் தொடர்புகொள்வது. குறிப்பாக இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள அரசு நிறுவனங்கள்.
இல்லையெனில் ஒவ்வொரு நாளும் ஒரு தேர்தல் நெருங்கும் போது, இது வெளிவந்து பின்னர் மறைந்து விடுகிறது. இதை அரசியல் பிரச்சினையாக்க முடியாது.
சரியான முறையில் விசாரணைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு அரசாங்க நிறுவனங்களுக்கு நாங்கள் எங்கள் ஆதரவை வழங்குகிறோம்” என தெரிவித்தார்.