அடாவடிக் கும்பலுக்குப் புரிந்த மொழியிலேயே பாடம் கற்பித்த ஜீவன்! – செந்தில் புகழாரம்

Share

மாத்தளை, ரத்வத்தை தோட்டப் பகுதியில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் வீட்டை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து நொருக்கிய விவகாரத்துக்குத் தோட்ட முகாமையாளரின் பாணியிலேயே அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதிலளித்துள்ளார் என கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மாத்தளை, ரத்வத்தை தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர் ஒருவரால் கட்டப்பட்ட வீட்டை தோட்ட உதவி முகாமையாளர் அடித்து நொறுக்கியிருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான்,

“தோட்டத் தொழிலாளர்களுடன் நிர்வாகத்தினர் பேச்சுகள் மேற்கொண்டால் அதே அணுகுமுறையைத்தான் இ.தொ.காவும் தோட்ட முகாமையாளர்களிடம் கடைப்பிடிக்கும். மாறாக அடாவடித்தனத்தில் தொழிலாளர்களை அணுகினால் அதே பாணியில்தான் இ.தொ.கா. அவர்களுக்குப் பதிலளிக்கும்.

தோட்டத் தொழிலாளர்களை நாகரிகமாக நடத்த வேண்டும் என்பதில் இ.தொ.கா. உறுதியாகவுள்ளது. தோட்டங்களை மாத்திரமே கம்பனிகளுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. மாறாக அங்கு வாழும் மக்களை அல்ல.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலத்தில் தோட்ட முகாமையாளருடன் சரிக்குச் சமமாக தொழிலாளர்கள் அமர்ந்து பேசும் நிலையை உருவாக்கினார்கள்.

இவ்வாறான சூழலில் தோட்டத் தொழிலாளர்களால் கட்டப்பட்ட வீட்டை இடித்தமையையை இ.தொ.கா. வன்மையாகக் கண்டிப்பதுடன், அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் மக்கள் பக்கம் நின்று செயற்பட்டுள்ளார்கள்.

இந்தத் தோட்டம் மட்டுமல்ல அடாவடித்தனத்தில் ஈடுபடும் அனைத்து முகாமையாளர்களுக்கும் இதுவொரு பாடமாக அமையும் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை.” – என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு