இந்தக் கல்வி முறையை மாற்றாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை! – ஜனாதிபதி தெரிவிப்பு

Share

எதிர்கால உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய மற்றும் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நுகேகொடை அனுலா வித்தியாலயத்தின் 2019/2020 வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று (16) பிற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த வருடம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற நுகேகொடை அனுலா வித்தியாலய மாணவிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஆசிரியர்கள் ஜனாதிபதியால் பாராட்டப்பட்டனர்.

ஜனாதிபதியொருவர் நுகேகொடை அனுலா வித்தியாலயத்துக்கு வருகை தந்த முதல் தடவை என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நினைவுப் பரிசொன்றையும் பாடசாலை அதிபர் வழங்கினார்.

மேலும், இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

“நுகேகொடை அனுலா வித்தியாலயம் இன்று அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு அதிபர் முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

பாடசாலை என்பது, எதிர்கால சந்ததியை உருவாக்கும் ஒரு இடமாகும். அதன் மூலம் நாட்டுக்கு சேவை செய்ய விரும்பும் ஒரு குடிமகனை உருவாக்கும் இயலுமையைக் கொண்டது. ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த கல்வி முறைக்கும் இன்றுள்ள கல்வி முறைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் வழங்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மாத்திரமே அன்று இருந்தன. ஆனால், இன்று கல்விக்கு, கையடக்கத் தொலைபேசி, கணினி பயன்பாடு என்பன இணைந்துள்ளன. அன்று மின்சார வாகனங்கள் பற்றி சிந்தித்திருக்கவில்லை. ஆனால், இன்று இலத்திரனியல் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் கடந்த காலங்களில் வேகமாக முன்னேறி வந்திருப்பது இதன் மூலம் தெளிவாகின்றது. அத்தகைய சூழலில் இன்று புதிய கல்வி முறைமையொன்று அவசியமாகும்.

சமுதாயத்துக்கு ஏற்ற கல்வி முறை இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில், நல்ல எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டும். சவால்களை முறியடிக்கக்கூடிய எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை கல்வியால் மாத்திரமே மேற்கொள்ள முடியும்.

எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கக்கூடிய, எதிர்காலத்தைப் பற்றிய புரிதல் கொண்ட கல்வி முறைமையை நம் நாட்டில் உருவாக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் கடந்த காலத்தைப் பற்றி மாத்திரமே சிந்திக்கிறார்கள். மாணவர்களாகிய நீங்கள் நிகழ்காலத்தைப் பற்றி சிந்திக்கிறீர்கள். ஆனால், நாம் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கின்றோம். எனவே, இதை சரி செய்து கொண்டு முன்னேற வேண்டும்.

கடந்த காலத்தைப் பற்றி சிந்திப்பவர்களை எப்படியாவது நிகழ்காலத்துக்குக் கொண்டு வர வேண்டும். நீங்கள் நிகழ்காலத்தில் இருக்கும்போது எதிர்காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

இந்தக் கல்வி முறையை மாற்றாவிட்டால் நமக்கு எதிர்காலம் இல்லை. புதிய கல்வி முறையின் மூலமே நாம் முன்னேற முடியும்.

தொழிற்சாலைகள், கட்டடங்கள் மற்றும் வீதிகள் அமைக்க முடியும் என்றாலும் கல்வி அறிவு இல்லாமல் எதிர்காலம் இல்லை. எனவே, புதிய கல்வி முறையை உருவாக்கி நாட்டுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க அரசு என்ற வகையில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.” – என்றார்.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் குமார, மேஜர் பிரதீப் உந்துகொட, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் எயார் ரொஷான் குணதிலக மற்றும் அதிபர், ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு