“மலையக மக்கள் எவரிடமும் பிச்சை கேட்கவில்லை. தமக்கான உரிமைகளையே கேட்கின்றனர். அந்த உரிமைகளை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
– இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவுகூரும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஏற்பாட்டில் இன்று (12) ஹட்டனில் இருந்து தலவாக்கலை வரை முன்னெடுக்கப்பட்ட நடை பேரணியில் பங்கேற்று தலவாக்கலையில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே திகாம்பரம் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நல்லாட்சி காலப்பகுதியே மலையகத்துக்குப் பொற்காலம். அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி எமது மக்களுக்காக எதுவும் நடக்கவில்லை. எமது ஆட்சிக் காலத்திலேயே காணி உரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டது. தனி வீடுகள் அமைக்கப்பட்டன. பிரதேச செயலகங்கள் அதிகரிக்கப்பட்டன.
ஜனாதிபதி அழைத்ததும் அவருடன் பேச்சு நடத்துவதற்கு ஓடும் நபர்கள் நாங்கள் அல்லர். இந்த அரசிடமிருந்து ஒரு மண்ணாங்கட்டியும் கிடைக்காது என்பது எங்களுக்குத் தெரியும்.
எமது மக்கள் பிச்சை கேட்கவில்லை. உரிமையைத்தான் கேட்கின்றனர். தனிநாடு கோரவில்லை; 10 பேர்ச்சஸ் காணியைதான் எமது மக்கள் கோருகின்றனர். அது வழங்கப்பட வேண்டும்.” – என்றார்.