“ராஜபக்சக்கள் எம்மை ஏமாற்றியது போன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எம்மை ஏமாற்றலாம் என்று தப்புக்கணக்குப் போடுகின்றார். இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமிழர் நலனில் அதிக சிரத்தையுடன் செயற்படுகின்றன என்பதை ரணில் விக்கிரமசிங்க உணர வேண்டும்.”
– இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய சந்திப்பு தொடர்பாக அவர் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குச் செல்லும் முன்னர் நேற்றுமுன்தினம் சந்திப்பை நடத்தியது எங்களையும் சர்வதேசத்தையும் சமாளிப்பதற்கே. எனினும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு வேண்டும் என்பதில் நாம் உறுதியாக நிற்கின்றோம்.
முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு அனைத்துக் கட்சிகளும் இணங்கினால்தான் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தலாம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறும் காரணத்தை ஒருபோதும் ஏற்க முடியாது. அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர். நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைப் பலத்துடனேயே அவர் பதவியில் இருக்கின்றார். எனவே, அவர் நினைத்தால் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நாம் கோரும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க முடியும்.
நாம் எமது நிலைப்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் அனுப்பியுள்ளோம். புதுடில்லியில் ரணில் விக்கிரமசிங்க அவரைச் சந்திக்கும்போது, இந்தியப் பிரதமர் எமது நிலைப்பாட்டை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.