இனியும் நம்மை எடுப்பார் கைப்பிள்ளைகளாகப் பயன்படுத்த விட முடியாது! – மனோ விளாசல்

Share

“ஒட்டுமொத்த 40 இலட்சம் இந்திய – தமிழக வம்சாவளி மலையகத் தமிழர்கள் தொடர்பில் இலங்கை அரசு, இந்திய அரசு, பிரிட்டிஷ் அரசு ஆகியவற்றுக்குப் பெரும் தார்மீகப் பொறுப்பும், கடமையும் இருக்கின்றன. இந்த அரசுகள் தமது தேசிய சொந்த நலன்களுக்காக இனியும் நம்மை எடுப்பார் கைப்பிள்ளைகளாகப் பயன்படுத்த விட முடியாது.”

– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற மனோ கணேசன் தெரிவித்தார்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியைக் கெளரவ தலைவராகக் கொண்டு தமிழ்நாட்டில் இலங்கை – தமிழக மலையகத் தமிழர் தோழமை இயக்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு – திருச்சியில் நேற்றுமுன்தினம் (05) நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் மனோ கணேசன் எம்.பி. உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இது ஒரு வரலாற்று முகியத்துவம் மிக்க நாள். இலங்கையில் வாழும் இந்திய – தமிழக வம்சாவளி மலையகத் தமிழரும், இந்திய – தமிழகத்துக்குத் தாயகம் திரும்பியதாகச் சொல்லப்படும் தமிழகத்தில் வாழும் மலையகத் தமிழரும் அமைப்பு ரீதியாக ஒன்றுபடும் நாள்.

இதன்மூலம் இலங்கையில் வாழும் இந்திய – தமிழக வம்சாவளி மலையகத் தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களது அபிலாஷைகள் தொடர்பில் தமிழகத்தில் புதிய ஒளி பாய்ச்சப்படுகின்றது. அதேபோல் தாயகம் திரும்பியதாகச் சொல்லப்பட்டு தமிழகத்தில் வாழும் மக்களின் துன்பங்களையும் அறியக் கூடியதாக இருக்கின்றது.

இலங்கையில் ஏறக்குறைய 15 இலட்சம் இந்திய – தமிழக வம்சாவளி மலையகத் தமிழர் வாழ்கின்றார்கள். அதேபோல் தாயகம் திரும்பியதாகச் சொல்லப்படுவோர் தமிழகத்தில் 25 இலட்சம் பேர் வாழ்கின்றார்கள். ஆக மொத்தம் 40 இலட்சம்.

இந்த 25 இலட்சம் பேருடன் சேர்த்து மொத்தம் 40 இலட்சம் பெரும் இலங்கையில் குடியுரிமையுடன் வாழ்ந்திருக்க வேண்டும். வாழ்ந்திருந்தால் இலங்கை நாடாளுமன்றத்தில், நாம் 40 எம்.பிக்கள் இருந்திருப்போம். அதன்மூலம் அரசியல் ரீதியாக நாம் பலம் பெற்று இருந்திருப்போம். எம்மை மீறி எவரும் இலங்கையில் அரசு அமைக்க முடியாது. ஆகவே, எமது உரிமைகள் இன்றைய நிலைமையைப் போல் பறிக்கப்படும் நிலைமை ஒருபோதும் உருவாகி இருக்காது.

ஆனால், 1948இல் எமது குடியுரிமை பறிக்கப்பட்டது. அப்புறம் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இனவாத அரசை எதிர்த்து அன்றைய நமது தொழிற்சங்க தலைமைகள் மக்களை அணிதிரட்டி போராட்டங்களைச் செய்யத் தவறினார்கள். அப்போது காத்திரமாகச் செயற்பட்டு இலங்கை அரசை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தவறிய இந்திய அரசு, அதன் பின் 1964 இல் எம்மிடம் கலந்து ஆலோசிக்காமலேயே பெருந்தொகையான எமது மக்களை இந்தியாவுக்குத் திருப்பி எடுத்து எம்மைப் பலவீனமடையவும் செய்து விட்டது.

அன்று அப்படி தாயகம் திரும்பிய மக்களின் வாழ் நிலைமையும் மிகவும் மோசமாகவே இருக்கின்றது. இவர்களுக்குச் சரியான நல்வாழ்வுத் திட்டங்களை அமைத்துத் தர இந்திய அரசு தவறி விட்டத்தையும் இன்று நான் கண்கூடாகக் காண்கின்றேன்.

மறுபுறம் 1948 முதல் 1972 வரை, இலங்கை பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ்தான் இருந்தது. அதன்பிறகுதான் இலங்கை குடியரசானது. குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்டபோதும்,1956 சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டபோதும், 1964இல் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் செய்யப்பட்ட போதும், பிரிட்டிஷ் அரசு வாய் திறக்கவில்லை. அன்றைய நமது தொழிற்சங்கத் தலைமைகளும் இந்த அநீதிகளை பிரிட்டீஷ் முடியாட்சிக்கு எடுத்துக் கூறி, நியாயம் கேட்கவும் இல்லை. எல்லாவற்றுக்கும் மேல் எமது மூதாதையினரை 1823 முதல் இலங்கைக்குக் கொண்டு சென்று, தமக்கு ஏற்றுமதி வருவாய் தந்த பெருந்தோட்டங்களை அமைத்ததும் பிரிட்டிஷ் முடியாட்சித்தான்.

ஆகவே, இந்த ஒட்டுமொத்த 40 இலட்சம் தமிழர்கள் தொடர்பில் இலங்கை அரசு, இந்திய அரசு, பிரிட்டிஷ் அரசு ஆகியவற்றுக்குப் பெரும் தார்மீகப் பொறுப்பும், கடமையும் இருக்கின்றன. இந்த அரசுகள் தமது தேசிய சொந்த நலன்களுக்காக இனியும் நம்மை எடுப்பார் கைப்பிள்ளைகளாகப் பயன்படுத்த விட முடியாது.

இந்த மூன்று அரசுகளும் முன்வந்து எமக்கான நல்வாழ்வுத் திட்டங்களை அமைத்துத் தர வேண்டும். அதை நாம் இனி தேசிய, சர்வதேச அரங்குகளில் வலியுறுத்தி தீர்வுகளைத் தேடி பெறுவோம். இலங்கை – தமிழக மலையகத் தமிழர் தோழமை இயக்கத்தின் மூலம் இந்த நோக்கங்களை நாம் வலியுறுத்துவோம்.” – என்றார்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு