https://www.youtube.com/watch?v=KyLtFlFmP1M
“ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு என்ற போர்வையில் ஊடகங்களை ஒடுக்குவதற்கான – ஊடகங்களை ஊமையாக்குவதற்கான செயற்பாட்டைச் செய்வதற்கு மொட்டுக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்த கலப்பட அரசு முனைந்துகொண்டிருக்கின்றது – முண்டியடித்துக்கொண்டிருக்கின்றது.”
– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஸ்ரீநேசன் குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசின் இந்த நடவடிக்கையால் ஊடகத்துறை ஊமையாக்கப்படுவது மட்டுமல்லாமல் செய்தி எழுத்தாளர்களின் கைகளுக்கு விலங்கு போடக்கூடிய அல்லது அவர்களுடைய விரல்களை உடைக்கக்கூடிய நிலைமை தோன்ற வாய்ப்பிருக்கின்றது.
மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருத்தப்படுகின்ற ஊடக சுதந்திரத்தை மட்டுப்படுத்தி – கட்டுப்படுத்தி முடமாக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது.
மக்களின் குரல் ஊடகத்தின் மூலமாக வெளிக்கொணரக்கூடிய வாய்ப்பு அங்கு தடுக்கப்படுகின்றது. அதாவது மக்களின் குரல் வளைகள் நசுக்கப்படுவதற்கும் அவர்களுடைய பேச்சுரிமை – எழுத்துரிமை – கருத்துரிமை மறுக்கப்படுவதற்குமான வாய்ப்பு இருக்கின்றது.
அரசியல்வாதிகளின் ஊழல், மோசடிகள், கையூட்டுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் அதிகரிப்படுவதற்கும், அவை பற்றி விமர்சிப்பவர்களின் குரல் ஊமையாக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.
முற்போக்கான – புரட்சிகரமான கருத்துக்கள், சிந்தனைகள், செயற்பாடுகள் முற்றாக ஒடுக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.
இதனால் ஆட்சியாளர்கள் எதேச்சதிகாரிகளாக – சர்வாதிகாரிகளாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் நலன் பற்றி சிந்திக்கின்ற செயற்பாட்டாளர்கள் இந்தச் சட்டமூலத்தை எதிர்த்து – இந்தச் சட்டமூலம் சட்டமாக வராமல் தடுப்பதன் மூலமாக மக்களின் உரிமைகளை – மக்களின் சுதந்திரத்தை – ஊடக தர்மத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.” – என்றார்.