களுத்துறை, பெலவத்தை நகரில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனமொன்றுக்குச் சிகிச்சைக்காகச் சென்ற ஒருவரைச் சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
கொகரதுவ, பெலவத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
நீதிவான் விசாரணைகளின் பின்னர் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காகப் பெலவத்தையில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனத்துக்கு நேற்று சென்றிருந்தார்.
அப்போது, கார் ஒன்றில் வந்த சிலர் அவரைக் கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, உயிரிழந்தவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்குச் சென்ற அடையாளம் தெரியாத ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றிருந்தார் என்று அவரின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.